ஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      தமிழகம்
minister pandiarajan 2018 3 31

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆவடி நகராட்சி மாநகராட்சியாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிப்படி ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு ஆவடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த தேர்தலின் போது ஆவடியில் தொழில் நுட்ப பூங்கா, இயற்கை பூங்கா, மற்றும் ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதில், தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இயற்கை பூங்கா அமைக்கும் பணிகள் 32 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (இன்று) திறந்து வைக்க இருக்கிறார். இனி அது மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கும். தற்போது ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தும்அறிவிப்பு வந்துள்ளது. 5.2 லட்சம் மக்கள் தொகை கொண்ட 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே தரம் உயர்த்தப்படுகிறது.

ஆவடிக்கு அருகாமையில் உள்ள நகரங்கள் மாநகராட்சியோடு இணையுமா, இணையாதா என்பது இப்போது கூற முடியாது. எதிர் காலத்தில் அதுகுறித்து அரசு முடிவெடுக்கும். மாநகராட்சியாக தரம் உயருவதன் மூலம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 2 கோடி ரூபாய் செலவில் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவை நிறைவுற்றதும் குறைந்தது 3 ரயில்களாவது ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை வைக்கப்படும். மேலும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்டபகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. அங்கு அருங்காட்சியம் அமைப்பதற்கான நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த அருங்காட்சியகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து