முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து முன்னாள் அதிபர் மரணம் குறித்து விசாரணை அவசியம்: ஐ.நா. வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஜெனீவா : எகிப்து முன்னாள் அதிபர் மரணம் குறித்து விசாரணை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

எகிப்தில் நீண்டகாலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக், பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012-ம் ஆண்டில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முகமது மோர்சி அதிபரானார். ஆனால் ஒரு ஆண்டுக்குள்ளாக முகமது மோர்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. எதிர்க்கட்சியினருடன் இணைந்து மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனை தொடர்ந்து, அப்போதைய ராணுவ மந்திரி அப்தல் பத்தா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியை பதவியை விட்டு நீக்கியதுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதற்காக முகமது மோர்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திடீரென அவர் கோர்ட்டிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முகமது மோர்சியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, முழுமையான திட்டமிட்ட கொலை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், முகம்மது மோர்சி மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை அவசியம் என்று தெரிவித்துள்ளது. காவல் கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஏற்படும் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணையை தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு விசாரித்து மரணத்திற்கான காரணத்தை அறிவது அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கோல்விலே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து