முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 19 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வெயில் தாக்கம்...

அக்னி நட்சத்திரம் முடிந்து 3 வாரம் ஆகியும் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தாமதம், அரபிக்கடலில் உருவான வாயு புயல் ஆகிய காரணங்களால் வெப்ப நிலை மேலும் அதிகரித்தது. குறிப்பாக வடதமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக வெப்ப நிலை சராசரியை விட மிக அதிகமாக உள்ளது.

12 இடங்களில்...

தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் அதிகபட்சமாக தலா 107 டிகிரி வெயில் பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினத்தில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கு, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி, கடலூர், கரூர், பரமத்தி, தொண்டியில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்காலில் தலா 102 டிகிரி வெயில் பதிவானது.

அனல் காற்று வீசும்...

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வடதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். சென்னை, வேலூர், கடலூர்,காஞ்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சாதகமான சூழல்...

வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து