பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை 28-ம் தேதி கூடுகிறது - கூட்டத் தொடர் ஒரு மாதம் நீடிக்கும்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தமிழகம்
Tamilnadu assembly 2019 06 20

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை வரும் 28-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. கூட்டத்தொடர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.

பட்ஜெட் தாக்கல்...

தமிழக சட்டசபையில் 2019- ம் ஆண்டுக்கான கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி கூடியது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தனது உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஜனவரி 4 ம் தேதி முதல் 8ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி தமிழக சட்டசபையில் மீண்டும்கூடியது. அதில் 2019ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணைமுதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான பொதுவிவாதம், தமிழக சட்டசபையில் 5 நாட்கள் நடைபெற்றது.
இரங்கல் தெரிவிக்கப்படும்...

இதையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதற்காக மீண்டும் வரும் 28ம் தேதி சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியானது. சட்டசபைஇடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் 122 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் சட்டசபை மானியக்கூட்டத் தொடர் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான 28ம் தேதி நடைபெறும். கூட்டத்தில் சூலூர் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் கனகராஜ், விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. உறுப்பினர் ராதாமணி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

பட்ஜெட் மானிய...

தமிழக சட்டசபையின் பட்ஜெட் மானியக்கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது குறித்து வரும் 24-ம் தேதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. சுமார் ஒரு மாதம் வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 9 புதிய உறுப்பினர்களும் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 உறுப்பினர்களும் கலந்துகொள்வதால், இந்த கூட்டத்தொடர் களைகட்டும்.

செயலாளர் அறிவிப்பு...

சட்டசபை கூடுவது தொடர்பாக தமிழக சட்டசபையின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174 (1) கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை 2019-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து