இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      இந்தியா
water crisis 2019 06 20

புது டெல்லி : இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது எனவும், இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி செய்தியை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு குடிநீர் வசதி இருக்காது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், 6 காடுகள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதாகவும் நிதி ஆயோக் வெளியிட்ட தகவல் மூலம் வெளியாகி உள்ளது. அதே போல் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும், மழைப்பொழிவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய தண்ணீர் அகாடமியின் முன்னாள் இயக்குனர் மனோகர் குஷலானி இது தொடர்பாக கூறியதாவது,

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு நம்பியுள்ளது. ஆனால் பூமி என்பது வரையறுக்கப்பட்ட கிரகம் என்பதும், இங்கு கடல்நீரும் ஒரு நாள் வறண்டு போகும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். நம் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கு நாம் என்ன விட்டு செல்கிறோம்? நம்மிடத்தில் நிறைய பணம் உள்ளது. ஆனால் நம் குழந்தைகளிடம் தண்ணீருக்கு பதிலாக பணத்தை குடிக்க சொல்ல முடியாது. நீரை சேமிப்பதற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒரு தீர்வாகாது. நீரை சேமித்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவை அரசு மற்றும் மக்களுக்கு உள்ள கூட்டு பொறுப்பு என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து