உலக கோப்பை இந்திய அணியில் தொடரும் சோகம்: புவனேஷ்வர் - தவானை அடுத்து விஜய் சங்கருக்கு காலில் காயம்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      விளையாட்டு
vijay shankar 2019 06 20

மான்செஸ்டர் : உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கருக்கு 2-வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை அணியில் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தவான், புவியைத் தொடர்ந்து விஜய் சங்கருக்கும் காயம்: பும்ராவின் யார்க்கர் கால் விரல்களை பதம்பார்த்தது உடனடியாக மீண்டார்...

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டத்திற்கு தயாராகும்போது, கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் முழங்கையை பலமாக தாக்கியது. அதிர்ஷ்டவசமாக முறிவு ஏதும் ஏற்படாததால், காயத்தில் இருந்து உடனடியாக மீண்டார்.
ஆப்கானை எதிர்கொள்கிறது...

முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பிடித்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். தவான் இல்லாததால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இதனால் விஜய் சங்கர் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. நாளை ஆப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் மழை பெய்த போதிலும் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கால் விரல்களில்...

விஜய் சங்கர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது பும்ரா வீசிய யார்க்கர் பந்து, அவரின் கால் விரல்களை பலமாக தாக்கியது. இதனால் விஜய் சங்கர் வலியால் துடித்தார். இன்றைய பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோதிலும், அடிக்கடி பிசியோ எடுத்துக் கொண்டார். இதனால் தவானையடுத்து விஜய் சங்கரும் வெளியேறும் நிலை ஏற்படுமோ? என்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். விஜய் சங்கர் காயம் குறித்து இந்திய அணிக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வந்த தகவலில் ‘‘விஜய் சங்கருக்கு காயத்தால் வலி இருந்தது உண்மைதான். ஆனால் வலி குறைந்துவிட்டது. அவருடைய காயம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஷ்குமார்...

இந்திய அணியில் ஏற்கனவே வேகபந்து வீச்சாளர் புவனேஷ்குமார் காயம் காரணமாக சில ஆட்டங்களில் பங்கேற்காமல் உள்ளார். பேட்ஸ்மேன் தவான் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார். இந்தநிலையில் தற்போது விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து