நியூசிலாந்திடம் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் பாய்ச்சல்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      விளையாட்டு
du Plessis 2019 06 20

பர்மிங்காம் : நியூசிலாந்துடன் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது என தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறியுள்ளார்.

241 ரன்கள் மட்டும்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்திடம் தோற்றது. பர்மிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்னே எடுக்க முடிந்தது. மழையால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. வான்டர்டுசன் அதிக பட்சமாக 67 ரன்னும், ஹசிம் அம்லா 55 ரன்னும் எடுத்தனர். பெர்குசன் 3 விக்கெட்டும், போல்ட், கிராண்ட் ஹோம், சான்ட்னர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

நியூசி. வெற்றி...

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் சதத்தால் 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் 242 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வில்லியம்சன் 138 பந்துகளில் 106 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), கிராண்ட் ஹோம் 47 பந்தில் 60 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ்மோரிஸ் 3 விக்கெட்டும், ரபடா, நிகிடி, பெகுலு வாயோ தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

வெளியேறுகிறது ?

தென் ஆப்பிரிக்கா அணி 4-வது தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது. வில்லியம்சன் ஆடிக் கொண்டு இருந்த போது பந்து மட்டையில் பட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால் டி.ஆர்.எஸ்.சுக்கு செல்லாததால் அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. இம்ரான்தாகீர் அப்பீல் செய்தாலும், விக்கெட் கீப்பர் குயின்டன்டிகாக் அதை கண்டு கொள்ளவில்லை. அந்த நேரத்தில் வில்லியம்சன் வெளியேறி இருந்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருக்கலாம். அவர் கடைசி வரை போராடி நியூசிலாந்து அணியை வெற்றிப் பெற வைத்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா பீல்டிங் அணுகுமுறை மோசமாக இருந்தது. இதுவும் அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

பேட்ஸ்மேன்கள்...

இந்த தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறியதாவது:-

இரு அணிகளுக்கும் உள்ள வேறுபாடு பேட்டிங் தான். எங்கள் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. 20 முதல் 30 ரன்கள்வரை நாங்கள் குறைவாக எடுத்து விட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் வில்லியம்சன் மட்டையில் பந்து பட்டதை அறிந்து தானாக வெளியே செல்லாதது தொடர்பாக விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் விமர்சித்து உள்ளனர். அதே நேரத்தில் அவரது அபாரமான பேட்டிங்கை கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து