முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த பிரதமர் மோடிக்கு ரஞ்சன் கோகாய் கடிதம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு மூன்று கடிதங்களை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நீதிபதிகள் எண்ணிக்கை 31 என்ற முழு அளவை எட்டி இருக்கிறது. 58 ஆயிரத்து 669 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆண்டுதோறும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 25 ஆண்டுகளாக 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல் 20 ஆண்டுகளாக 100 வழக்குகளும், 15 ஆண்டுகளாக 593 வழக்குகளும், 10 ஆண்டுகளாக 4,977 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2007-ம் ஆண்டு 41ஆயிரத்து 78 வழக்குகள் நிலுவையில் இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க 1988-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 18-ல் இருந்து 26 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின் நீதிபதிகள் எண்ணிக்கை 31-ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். இதனால் கோர்ட்டில் திறமையாக இயங்குவதுடன் மக்களுக்கு நீதி விரைவில் கிடைக்கும்.

கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி, ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட்டில் நீதிபதிகள் எண்ணிக்கை 895-ல் இருந்து 1079-ஆக அதிகரிக்கப்பட்ட போது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. தற்போது 24 ஐகோர்ட்டுகளில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேங்க போதிய அளவு நீதிபதிகள் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. மொத்த நீதிபதிகளில் 35 சதவீதம் (377 இடங்கள்) காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதில் முழு முயற்சி செய்யாதவரை பணியிடங்களை நிரப்ப முடியாது. இதனால் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 65-ஆக உயர்த்த வேண்டும். இதன் மூலம் காலி பணியிடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு வழக்குகளில் தீர்வு உண்டாகுவதிலும் முன்னேற்றம் காணலாம். இந்த பரிந்துரை பாராளுமன்ற நிலைக்குழுவிடமும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும் போது 62 வயது தாண்டியவர்களும் 65 வயது வரை பணிபுரியலாம். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து