முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

93-வது பிறந்த நாள்: சென்னை தியாகராயர் நகரில் கவிஞர் கண்ணதாசனின் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு 24.6.2019(இன்று) அன்று காலை 8.30 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 24-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சிறுகூடல்பட்டி கிராமத்தில் சாத்தப்பன் - விசாலாட்சி இணையருக்கு 24.6.1927 அன்று கண்ணதாசன் மகனாகப் பிறந்தார். இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் இயேசு காவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கவியரசு கண்ணதாசன்  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். திருமகள், திரைஓலி, மேதாவி, சண்டமாருதம், தென்றல் கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். இவரது ஆட்டனத்தி ஆதிமந்தி செய்யுள் தமிழ்நாடு அரசு பாடநூலில் இடம்பெற்றுள்ளது. 

கவியரசு கண்ணதாசன், 1970-ம் ஆண்டு மத்திய, மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். 1978-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.  தலைமையிலான தமிழ்நாடு அரசு கண்ணதாசனை அரசவைக் கவிஞராக நியமித்து பெருமைப்படுத்தியது. 1979-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற கவியரசு கண்ணதாசன் 17.10.1981 அன்று  இயற்கை எய்தினார்.

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசனின்  திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு 24.6.2019 அன்று காலை 8.30 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து