வடகொரிய நாட்டு தலைவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      உலகம்
trump letter kim 2019 06 24

பியாங்காங் : வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு, அதிபர்  டிரம்ப் கடிதம் எழுதி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால், இருநாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் டிரம்பிடம் இருந்து, தனக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்று வந்துள்ளது என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. அதே சமயம் அந்த கடிதத்தை அற்புதமானது என பாராட்டியதோடு, கடிதத்தின் உள்ளடக்கம் மிகச்சிறப்பானது என்றும், அது குறித்து தான் தீவிரமாக பரிசீலனை செய்ய இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் டிரம்பின் அசாதாரண தைரியத்தை கிம் ஜாங் அன் வெகுவாக பாராட்டியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. டிரம்ப் எழுதிய கடிதம் கிம் ஜாங் அன்னுக்கு எப்போது அல்லது எப்படி கிடைத்தது என்பது குறித்த விவரங்கள் இல்லை. அதே போல் இந்த கடிதம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.டிரம்ப், அடுத்த வாரம் தென்கொரியாவுக்கு செல்ல இருக்கும் நிலையில், அவர் கிம் ஜாங் அன்னுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து