முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் - கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என பிரதர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.மேலும்,  கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

தீர்ப்புக்கு எதிரானது...

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

காவிரியின் குறுக்கே மேகத்தாட்டுவில் புதிதாக அணை கட்டுவதற்கான அனுமதியைக் கோரி அதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசின் காவிரி நதிநீர் வாரியம் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த பிரச்னையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் உடனடியாகத் தலையிட வேண்டும். கர்நாடகத்தின் இந்தச் செயல், காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறைக்கு உரிய உத்தரவை வழங்கிட வேண்டும். மேகத்தாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், தனது எதிர்ப்பையும் பதிவு செய்து கொண்டே வருகிறது.

பாதிப்பை ஏற்படுத்தும்...

காவிரி நதிநீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவிலும், காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவிலும் மேகதாட்டுவில் அணை தொடர்பான விஷயங்கள் ஏதும் வரையறுத்துக் கூறப்படவில்லை. மேலும், காவிரி நதிநீர் படுகை மாநிலங்களாக இருக்கக் கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிடம் அணை திட்டம் தொடர்பாக கர்நாடகம் எந்த முன் அனுமதியையும் பெறவில்லை. காவிரி நதிக்கு மேல்புறம் இருக்கக் கூடிய மாநிலங்கள், அதாவது கர்நாடகம் போன்றவை நதியின் குறுக்கே ஏதாவது அணைத் திட்டங்களைச் செயல்படுத்தினால் அது நதிக்கு கீழ்புறம் இருக்கக் கூடிய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரங்கள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்காக நிலுவையில் உள்ளன. இந்த பிரச்னையை கடந்த 15-ம் தேதி தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.
செயல்படுத்தக் கூடாது...

காவிரியின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ள திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு துறை நிராகரிக்க வேண்டும். இதற்குரிய உத்தரவை அந்தத் துறைக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும். கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்பிட மத்திய நீர் வள ஆணையத்துக்கு, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உத்தரவிடலாம். மேலும், காவிரி படுகையைச் சேர்ந்துள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. இதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து