முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜூன், ஜூலை மாதத்திற்கான 40.43 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும்...

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டி.எம்.சி நீரை வழங்க சில தினங்களுக்கு முன்பு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 1.77 டி.எம்.சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பருவ மழையையும், அணைகளில் நீர் இருப்பையும் காரணம் காட்டி வழக்கம்போல் கையை விரித்தது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆணைய கூட்டம்...

இந்நிலையில் டெல்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நேற்று நடந்தது. தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகம் எதிர்ப்பு...

கூட்டத்தில் காவிரிநீர் தொடர்பான கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கோரியதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இனி வரும் கூட்டங்களிலும் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது. ஜூலை மாதத்துக்கான 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.

முழுமையாக வழங்க...

இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரையும் ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி நீரையும் முழுமையாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், மழை அளவு மற்றும் அணைக்கான நீர்வரத்தை பொறுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மழையை பொறுத்து...

கூட்டத்திற்கு பின் ஆணைய தலைவர் மசூத் உசைன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மழை அளவைப் பொறுத்து, தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை 1.77 டி.எம்.சி. நீர் கடந்த 24-ம் தேதி வரை திறந்து விடப்பட்டுள்ளது . தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து