முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எமர்ஜென்சி காலத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு வணக்கம் - பிரதமர் மோடி, அமித்ஷா டுவிட்டரில் கருத்து

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக மோடியும், அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிந்துரையை ஏற்று அப்போது ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமது நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். 21 மாதங்கள் அவசர நிலை நடைமுறையில் இருந்தது. 1975-ம் ஆண்டு 25-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நாட்டில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது. இந்த 21 மாதங்களில் நாட்டில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட. மக்களின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், அவசர நிலையை எதிர்த்தும் குரல் கொடுத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடந்தன.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டனர். அவரச நிலை நாட்டில் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 44 ஆண்டுகள் ஆகின. அதனை நினைவுபடுத்தி பிரதமர் மோடி டுவிட்டரில் காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடியுள்ளார். நாட்டில் அவசர நிலையை தீவிரமாகவும், அச்சமின்றியும் எதிர்த்த மிகப்பெரியவர்களுக்கு இந்தியா வணங்குகிறது. எதேச்சதிகார மனநிலை படைத்தவர்களிடம் இருந்து விடுபட்டு, இந்திய ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுகிறது என மோடி அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், 1975-ம் ஆண்டில் இதே நாள், ஒரு சிலரின் அரசியல் நலனுக்காக, நாட்டின் ஜனநாயகம் கொல்லப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன, நாளேடுகளுக்கு தணிக்கை முறை வந்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு லட்சக்கணக்கானோர் போராடினார்கள். பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்தார்கள். போராடிய அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து