முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க. கட்சி அம்பேல் ஆகிறது டி.டி.வி. தினகரனை கடுமையாக விமர்சித்த தங்கதமிழ் செல்வன்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் ஒரு ஆடியோ மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் மூலம் அந்த கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரனின் வலதுகரமாக திகழ்ந்தவர் தங்கதமிழ் செல்வன். அவர் சென்ற இடமெல்லாம் அவரோடு சேர்ந்து பேட்டியளிப்பதும் இவருக்கு வழக்கம். தினகரனுக்கு மிகுந்த நெருக்கமானவராக தங்கதமிழ் செல்வன் இருந்து வந்தார். இதனாலேயே அவருக்கு அக்கட்சியில் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து தென் மாவட்ட முழுவதும் பல கூட்டங்களை நடத்தினார் தங்கதமிழ் செல்வன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் தங்கதமிழ் செல்வனும் ஒருவர்.

கனவு தகர்ந்தது

இந்த சூழ்நிலையில்தான் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் சமீபத்தில் நடந்தன. ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை பறிகொடுத்த தங்கதமிழ் செல்வன், இந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகி விடலாம் என்று கனவு கண்டார். அதையடுத்து தேனி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஆனால் தங்கதமிழ் செல்வனுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை இழந்த அவர், எம்.பி. தேர்தலிலும் தோற்றதால் மிகுந்த விரக்தியோடு இருந்தாராம்.

இந்த நிலையில்தான் தற்போது அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் அவர், அ.ம.மு.க. நிர்வாகி ஒருவருடன் பேசுவதாக உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது,

உனது அண்ணன் மோசமான அரசியல் நடத்துகிறார். நான் விஸ்வரூபம் எடுத்தால் எல்லோரும் அழிந்து விடுவார்கள். நீயும் அழிந்து விடுவாய். நான் நல்லவன். இது போன்ற பேடித்தனமான அரசியல் பண்ண வேண்டாம் என்று அவரிடம் சொல். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுவதை தடுக்கிறார். நாளை நான் மதுரையில் கூட்டம் போடுவேன். என்ன நடக்கும் என்று பார். இவ்வாறு அவர் பேசியதாக அந்த ஆடியோ ஒலிக்கிறது. இந்த ஆடியோ விவகாரம் தினகரனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் உடனடியாக ஆலோசனை நடத்தி தங்கதமிழ் செல்வனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நீக்க முடிவு

தங்க தமிழ்செல்வனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க தினகரன் முடிவு செய்துள்ளார். கட்சிக்காக இவ்வளவு நாள் பாடுபட்ட தங்கதமிழ் செல்வனை நீக்க தினகரன் தற்போது அதிரடியாக முடிவு செய்து விட்டார். ஏற்கனவே பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்  தோல்விக்கு பிறகு அ.ம.மு.க. கூடாரம் சரிய தொடங்கி விட்டது. இப்போது தங்கதமிழ் செல்வனும் நீக்கப்பட்டு விட்டால் அக்கட்சியின் அஸ்திவாரமே ஆடிப்போய் விடும். எதிர்காலத்தில் அ.ம.மு.க. என்ற ஒரு அமைப்பு இல்லாமல் போனாலும் ஆச்சரியமில்லை. இந்த கட்சியில் மீதமிருக்கும் ஒரே நபர் வெற்றிவேல். அவரும் அந்த கட்சியை விட்டு போய் விட்டால் தினகரன் தனி மரமாகத்தான் நிற்க வேண்டியதிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசுக்கு பாராட்டு

இந்த நிலையில் தங்கதமிழ் செல்வன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த முதல்வர் எடப்பாடி அரசை அவர் மனமார பாராட்டி உள்ளார். மேலும் அ.தி.மு.க அரசையும் அவர் கடுமையாக விமர்சிக்கவில்லை. இரட்டை இலைக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் நான் தோற்றுப் போனேன் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனிக்கட்சி பற்றி கேட்ட கேள்விக்கு அதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா என்று பதிலளித்தார். அவர் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் அவரது அரசியல் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. முன்னதாக சில தினங்களுக்கு முன் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது தங்கதமிழ் செல்வன் வந்தால் வரவேற்போம். அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை என்று அமைச்சர் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து