அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
ravindranath kumar 2019 06 18

புது டெல்லி : அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ மையங்களை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேசினார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

மத்திய அரசு ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் மருத்துவ செலவுகளை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் மக்களுக்கான மருத்துவ திட்டத்தின் கீழ் 4900 மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 700-க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் குறைந்த விலையில் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படுகின்றன. மாரடைப்பை தடுக்கும் ஸ்டெண்டுகளுக்கான செலவினங்கள் வகையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மொத்தமாக ஆண்டுதோறும் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மிச்சமாகிறது. இந்தியாவில் மேலும் ஏராளமான கிராமங்களில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இது போன்ற மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் மேலும் 103 கேந்திரிய வித்யாலாய பள்ளிகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடல் பரிசோதனை கூடங்களையும் நிறுவிய மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன்.

பருவ மழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்து சேர வேண்டிய தண்ணீர் வராததாலும் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. வறட்சியை சமாளிக்கும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பயனுள்ள இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். பிரதமர் மோடி அனைவராலும் பின்பற்றக்கூடிய தலைவராக விளங்குகிறார். அவருடைய தலைமை பண்பு உலக அளவில் போற்றப்படுகிறது. கீதையில் கூறுவதை போல மாபெரும் மனிதர்கள் எந்த காரியத்தை செய்தாலும் சாதாரண மனிதர்கள் அவர்கள் கொண்ட அடிச்சுவட்டை பின்பற்றுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து