இங்கிலாந்துக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
Aus set Score 2019 06 25

லார்ட்ஸ் : லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

வார்னர் அதிரடி...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் 52 பந்திலும், ஆரோன் பிஞ்ச் 61 பந்தில் 50 அரைசதம் அடித்தனர். 22.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பிஞ்ச் சதம்...

அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 23 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிஞ்ச் சிறப்பாக விளையாடி 115 பந்தில் சதம் அடித்தார். ஆனால் சதம் அடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 35.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்திருந்தது. 87 பந்துகள் மீதமிருந்ததால் ஆஸ்திலேியா எளிதாக 300 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது.

285 ரன்கள்...

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 27 பந்தில் 38 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 10 ஓவரில் ஆஸ்திரேலியா 70 ரன்கள் மட்டுமே அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் ஆர்சர், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து