நெம்மேலியில் 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார் - 2021-க்குள் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi foundain drinking water 2019 06 27

சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,259 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் தேவை...

பருவமழை பொய்க்கும் போது, நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கக் கூடிய நீரின் அளவில் பற்றாக்குறை ஏற்படுவதனால், சென்னை நகரில் வசிக்கும் மக்களுக்கு வழங்கும் குடிநீரின் அளவு பாதிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அம்மா, ஏப்ரல் 2003-ல் தொலைநோக்கு பார்வையுடன் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, சொந்தமாக்கி இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, மீஞ்சூரில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்டு கடந்த 25.7.2010 அன்று முதல் இயங்கி வருகிறது. இதன்மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

நெம்மேலியில்...

அதன் தொடர்ச்சியாக, நெம்மேலியில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு, அம்மாவால் 22.2.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதன் மூலம், தென் சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ஜெயலலிதா அறிவிப்பு...

கடந்த 16.4.2013 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அம்மா வெளியிட்ட அறிவிப்பில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் கூடுதலாக நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

முதல்வர் அடிக்கல்...

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

9 லட்சம் மக்கள்...

இந்நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடான 1259 கோடியே 38 லட்சம் ரூபாயில், முகறு என்ற ஜெர்மனி நிதி நிறுவனத்திடமிருந்து கடனுதவியாக 700 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகை அம்ரூட் திட்டத்தின் கீழ் மானியமாகவும் பெற்று செயல்படுத்தப்படும். இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2021-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.  இப்புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதன் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் ஹரிஹரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் பிரபு சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து