முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: பின்வாங்கியது தி.மு.க. வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்து பல்டி

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மான விஷயத்தில் திடீரென தி.மு.க. பின்வாங்க காரணம், இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்தே ஸ்டாலின் பின்வாங்கியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

சட்டசபை கூடியது...

தமிழக சட்டசபை நேற்று காலை சபாநாயகர் தனபால் தலைமையில் கூடியது. நேற்று காலை சபை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின் சபைநடவடிக்கைகள் முடிந்து வெளியே வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கடிதம் கொடுத்துள்ளோம்...

சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள தேவையில்லை என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம். தற்போது அதை வலியுறுத்தப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பெரும்பான்மை உள்ளது...

இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மு.க. ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அவர் உணர்ந்ததற்கு நன்றி என்றார். மேலும் குடிநீர் பிரச்சினையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியை தக்கவைத்தது...

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீரமானம் கொண்டு வருவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார். ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தேவையான பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இனி என்ன முயன்றாலும் அ.தி.மு.க அரசை கவிழ்க்க முடியாது என்பதை அவர் உணர்ந்ததாலேயே இந்த முடிவுக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து