முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை கூடியது: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு மவுன அஞ்சலி - அவை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கை...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் பட்ஜெட்டை (நிதிநிலை) நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. விவாதத்துக்குப் பிப்ரவரி 14-ந் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மவுன அஞ்சலி...

இதனை அடுத்து தமிழக சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான உத்தரவை தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30-ம் தேதி பிறப்பித்தார். இதன்படி நேற்று காலை 10 மணிக்குப் பேரவை கூடியது. பேரவை கூடியதும் பேரவைத் தலைவர் தனபால் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரதாஸ் (விளவங்கோடு), கே.பஞ்சவர்ணம் (வலங்கைமான்), ஏ.சுப்பிரமணியம் (சிங்காநல்லூர்),

முன்னாள் அமைச்சர் செல்வராஜ் (முசிறி), ஏ.கே.சி.சுந்தரவேல் (திருப்பத்தூர்), மு.ராமநாதன் (கோவை மேற்கு), பொ.முனுசாமி (வந்தவாசி), சா.சிவசுப்பிரமணியன் (ஆண்டிமடம்) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார். தொடர்ந்து அனைவரும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்
இரண்டு மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஜூலை 1-ம் தேதி...

தொடர்ந்து தற்போதைய சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை கொண்டுவந்து பேரவைத் தலைவர் தனபால் பேசினார். பின்னர் பேரவை இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஜூலை 1-ம் தேதி காலை 10 மணிக்குப்
பேரவை கூடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து