முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதரை இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் - காஞ்சி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி அத்திவரதரை இன்று முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வரதராஜ பெருமாளையும், தங்கம், வெள்ளி பல்லி, பெருந்தேவி தாயாரையும் தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் இன்று அதிகாலை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதையொட்டி, மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வசதிக்காக கோவில் பின்புற கோபுரத்தில் இருந்து உள்ளே செல்லும் வரை நீண்ட வரிசைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரூ. 50 கட்டண வரிசை, ரூ. 500-க்கான சிறப்பு வசதி, முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கான சிறப்பு வரிசை என்று அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கோவிலின் பின்புற கோபுர பகுதியில் ரூ. 50-க்கான சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் நகரில், நகராட்சி உள்பட பல்வேறு இடங்களில் இலவச தரிசன டிக்கெட், ரூ. 50-க்கான டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டை வாங்கி செல்கின்றனர்.

பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க அத்திவரதர் கோவில் அலுவலகம் அருகே வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். வசந்த மண்டபம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவிலுக்கு வெளியே நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அத்திவரதரை தரிசிக்க ரோப்-கார், மூன்று சக்கர சைக்கிள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சுமார் 3 ஆயிரம் போலீசார் நேற்று முதல் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகத்தில், அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வருகையையொட்டி ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி போன்ற இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே கூடுதலாக 12 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 11 மணி முதல் மதியம் 12.50 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒருமுறை அரக்கோணம் சந்திப்பில் இருந்து செங்கல்பட்டுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்லும். மதியம் 1.30 மணி முதல் 3.15 மணிவரை செங்கல்பட்டில் இருந்து அரக்கோணத்துக்கு ரெயில்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து