முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமை செயலாளராக சண்முகம் புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் தலைமைச்செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே. திரிபாதியும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

தமிழகத்தின் 45-வது தலைமைச் செயலாளராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தின் 46-வது புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்றதையடுத்து அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்தவர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அவரது சொந்த ஊராகும். வேளாண்மை கல்வியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்று உள்ளார். பின்னர் ஐ.ஏ.எஸ். ஆன அவர் 1985-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி தமிழக அரசு பணியில் சேர்ந்தார்.  விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். சேரன்மகாதேவியில் பயிற்சி உதவி கலெக்டராக பணியை தொடங்கிய இவர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர் மற்றும் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.

திறமையான பணியின் காரணமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் அவர் நிதித்துறை செயலாளராக நீடித்தார். அந்த வகையில் கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 4 முதல்வரிடத்திலும் பணியாற்றி நற்பெயரை ஈட்டியிருப்பவர் அவர். நிதித்துறையில் அவர் பெற்ற அனுபவம் காரணமாக அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிறப்பாக செயல்படுபவராக திகழ்ந்தார். நிதி நெருக்கடி காலங்களிலும் நிதிச்சுமையை குறைக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியவர் கே.சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நேற்று மாலை 3.15 மணி அளவில் மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். புதிதாக பதவியேற்றுள்ள ஜே.கே. திரிபாதி சென்னை அண்ணாநகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் அனுஜா திரிபாதி. இவரும் பட்டதாரி. இவர்களுக்கு ஜட்வன் திரிபாதி எனும் மகனும், ஜிகிஷா என்ற மகளும் உள்ளார்கள். மகள் டாக்டர் பட்டமும், மகன் என்ஜினீயரிங் பட்டமும் பெற்று உள்ளனர்.

பணி ஓய்வு பெற்று சென்ற டி.கே. ராஜேந்திரனை காவலர்கள் மலர் தூவி வழியனுப்பி வைத்தனர். மேலும் அவரது காரை தேர் போல் அலங்கரித்து வடம் பிடித்து இழுத்து அவரை வழியனுப்பி வைத்தனர். இந்த தருணத்தில் டி.கே. ராஜேந்திரன் பெரிதும் நெகிழ்ச்சியடைந்தார்.

ஓய்வு பெற்ற டி.கே.ராஜேந்திரனுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழாவும், போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு காவல்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழு, நீலகிரி அணி ஆகிய 5 கமாண்டோ படை சார்பில் அணி வகுப்பு நடைபெற்றது. 5 கமாண்டோ படைகளின் அணிவகுப்பு மரியாதையை டி.கே.ராஜேந்திரன் ஏற்றுக்கொண்டார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் டி.ஜி.பி. ராஜேந்திரன் பேசியதாவது:-

சட்டப்படி செயல்பட்டேன். 33 ஆண்டுகால காவல்துறை பணியில் இருந்து முழு மனநிறைவுடன் விடைபெறுகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் தமிழக காவல்துறை கடுமையான சோதனைகள், சவால்களை சந்தித்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஓகி, கஜா புயல், தேர்தல் என பல்வேறு சவால்களை சந்தித்துள்ளோம். மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு தொடங்கி உள்ளோம். ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி. வெற்றிக்கு காரணம் நான் மட்டுமல்ல காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் தான். காவலர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துள்ளேன். எனது காவல்துறை பணி நிறைவுக்கு வந்த அதிகாரிகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து