முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் விடுமுறைக்குப் பின் சட்டசபை மீண்டும் கூடுகிறது: மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பம் - ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறும்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்கள் வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்

பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்டசபை கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி கூடியது. முதல் நாளில் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வழங்கப்பட்டதும் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

வனத்துறை மானிய கோரிக்கை

இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று முதல் மானியக் கோரி்க்கைகள் குறித்த விவாதம் தொடங்குகிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த விவாதங்களில் பங்கேற்று அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசுகின்றனர். இன்றைய விவாதங்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்கிறார். இடையே ஜீரோ அவர், கவனஈர்ப்பு தீர்மானங்களும் வருவதற்கு வாய்ப்புள்ளது. முன்னதாக காலை சட்டசபை தொடங்கியதும் கேள்வி, பதிலும் இடம் பெறுகிறது. வரும் ஜூலை 30-ம் தேதி வரை 23 நாட்கள் சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த கூட்டத் தொடரில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. திட்டமிட்டிருந்தது. ஆனால் சபாநாயகர் மீதான நம்பிக்கையி்ல்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 2 தினங்களுக்கு முன் அறிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்தே அவர் இவ்வாறு அறிவித்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அவர் இவ்வாறு உணர்ந்ததற்கு நன்றி என்று அமைச்சர் ஜெயகுமாரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து