முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் திறமையானவர்கள் விண்வெளி பயிற்சிக்கு செல்லும் செல்வி உதய கீர்த்திகா பேச்சு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      தேனி
Image Unavailable

   தேனி,- தேனி மாவட்டம், என்.ஆர்.டி மண்டபத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான ஊக்கப்பயிற்சி விண்வெளி பயிற்சிக்குச் செல்லும் செல்வி உதய கீர்த்திகா     மாவட்ட    ஆட்சித்தலைவர்    ம.பல்லவி பல்தேவ்  தலைமையில் நடத்தப்பட்டது.
  இந்த ஊக்கப் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
 தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பொருளாதார காரணங்களால் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி விலையில்லாமல் கல்வி உபகரணங்களையும், கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகை, சிறப்பு பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
 பள்ளி மாணவ, மாணவிகளிடம் உரையாடுவது என்பது எப்பொழுதும் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கும். இச்சூழலில் நமது மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி உதய கீர்த்திகா அவர்கள் அரசு பள்ளியில் பயின்று நமக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் பயில்கிறோம் என எண்ணாமல் அதில் உள்ள வாய்ப்புகளையும், சலுகைகளையும் கருத்தில் கொண்டு பயில வேண்டும். மாணாக்கர்களின் எண்ணத்திற்கும், குறிக்கோளுக்கும் வானமே எல்லை. எனவே, அதிக முயற்சியுடன் தம் மீது நம்பிக்கை வைத்து கல்வி பயில வேண்டும். ஓரு எண்ணம் அல்லது குறிக்கோளினை அடைய வேண்டும் எனில் அது நமக்கு விருப்பமானதாகவும், பிடித்ததாகவும் இருக்க வேண்டும். இதற்கு நானே முன்னுதாரணமாக இருக்கிறேன்.
 எனது எட்டு வயதிலேயே எதிர் காலத்தில் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என விருப்பப்பட்டேன். அதனை முன்னிருத்தியே தொடர்ந்து விடா முயற்சியுடன் பயின்றதால் ஐஏஎஸ் பணிக்கு தேர்வாக முடிந்தது. ஆகையால் மாணவர்கள் பிறரின் வற்புறுத்தலுக்கோ, தடைக்கோ ஆளாகாமல்  தனக்கு  பிடித்த   கல்வியை   தொடர்ந்து  விடா முயற்சியுடன்   செயல்படும்பொழுது லட்சியங்கள் எளிதாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்.,   தெரிவித்தார்.
 செல்வி உதய கீர்த்திகா அவர்கள் பேசும்போது தெரிவிக்கையில்,
  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பிற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை விட திறமையானவர்கள். ஏனென்றால் பெரும்பான்மையானோர் பொருளாதார சூழ்நிலைகளால் பயிலும் போது வீட்டின் சூழ்நிலையினை அறிந்து கல்வி பயில்வர்.
 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களோ அனைத்து வசதிகளையும் தங்களது குழந்தைகளுக்கு செய்து தருவார்கள். ஆனால் நாம் அவ்வாறு இல்லாமல் அனைத்தையும் நாமே எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், தமிழ் மொழியினை ஆழ்ந்து பயிலும் போது நமது சமூகத்துடன் ஒன்றிணைந்து கல்வி பயில முடியும். தமிழ்மொழியால் மட்டுமே நமது விருப்பு, வெறுப்புகளை அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு வெளிப்படுத்த முடியும்.
 மாணவ, மாணவியர்கள் கல்வி மட்டுமே முக்கியம் என கருதாமல் கல்வியுடன் சேர்த்து, தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்றிட வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடத்தினை தேர்வு செய்து மனப்பாடம் செய்யாமல் புரிந்து எவ்வித ஐயமுமில்லாமல் பயிலும்போது எந்தவிதமான தேர்வினையும் எளிதில் எதிர் கொள்ள முடியும். தங்களது எண்ணங்கள் மற்றும் குறிக்கோளினை பெற்றோரிடம் தெரிவித்து அவர்களுக்கு விளக்கி, ஆதரவினை பெற்று தொடர்ந்து பயில வேண்டும். உயர்ந்த லட்சியங்களை அடைவதற்கு நாம் விருப்பப்படும்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளும் போது, பொருளாதாரம் ஒரு தடையாக இல்லாமல் சமுதாயத்திடமிருந்து எளிதில் உதவிகள் கிடைக்கும்.
 பெற்றோரை விட அதிக நேரம் பள்ளிகளில் இருப்பதால் ஆசிரியர்களை தங்களது ஆசானாக கருதி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட பல்வேறு போட்டித்தேர்வுகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மிக முக்கியமானதாகும். நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே அடுத்து முக்கியமான பாட பிரிவுகளில் படிப்பதற்கு அரசின் உதவிகள் கிடைக்கும். எனவே, மாணவர்கள் கல்வியுடன் நுழைவுத்தேர்வுகளுக்கும் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என விண்வெளி பயிற்சிக்குச் செல்லும் செல்வி உதய கீர்த்திகா தெரிவித்தார். 
  இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.மாரிமுத்து (பணி நிறைவு) மாவட்ட கல்வி அலுவலர்கள் கு.ராஜேஸ்வரி, எஸ்.திருப்பதி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து