முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு 1,742 கோடி மதிப்பில் 26,671 வீடுகள் கட்டித் தரப்படும் - சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு ஆயிரத்து 742 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பின்னர், நேரமில்லா நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் மதிவாணன், கஜா புயலால்பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பட்டா நிலத்தில் வீடும் மற்றவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளும் கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 சதுர அடியில் பசுமை வீடுகள், விரைவில் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்து சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதில் வருமாறு:-

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இம்மாவட்டங்களில் நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருவதற்காக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலமாக மொத்தம் 28,671வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளாக ரூ.1,742.22 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பணி துவங்கப்படும்.

நான் ஏற்கெனவே சொன்ன பதிலின் மூலமாக இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7,458 தனி வீடுகள் ரூ. 298.32 கோடி மதிப்பீட்டிலும், 5,308 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.477.72 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 12,766 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் ரூ.776.04 கோடி மதிப்பீட்டில் 12 நகரங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 313 புதிய தனி வீடுகள் ரூ.12.52 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் கட்டும் பணிகள் பயனாளிகளின் தலைமையில் விரைவில் மேற்கொள்ளப்படும். தனி வீடுகள் அவரவர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் 300 ச.அ. பரப்பளவில் ரூ.2,10,000 என்ற மதிப்பளவில் கட்டப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளாக கட்டப்பட இருக்கிறது என்பதையும், 400 சதுரஅடியாக இருக்கும் என்றும், இன்னொரு திட்டத்தின்கீழ், ரூ. 2,10,000 திட்ட மதிப்பீட்டில் ஏற்கனவே குடிசை வீடுகளில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 சதுரஅடியில் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதனையும், கூடிய விரைவில் இந்தப் பணிகள் துவங்கப்படும் என்பதனையும், அவசியத்தைக் கருதி இந்தப் பணிகள் துரிதமாக துவங்கப்பட்டு பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மற்ற உறுப்பினர்களும் இதுகுறித்து பல்வேறு கேள்விகளை சட்டமன்ற செயலகத்தில் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தனி வீடுகளாக 1,217 வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளாக 960 குடியிருப்புகளும் ஆக மொத்தம் 2,177 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 5,502 வீடுகள் தனி வீடுகளாகவும், 4,284 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், ஆக மொத்தம் 9,786 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி வீடுகளாக 2,518 வீடுகளும், அடுக்குமாடி வீடுகளாக 400 சதுர அடி பரப்பளவில் 1,424 வீடுகளும், ஆக மொத்தம் 3,942 வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் தனி வீடுகளாக 16,695 வீடுகளும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாக 11,976 வீடுகளும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மொத்தமாக 28,671 வீடுகள் தனி வீடுகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உரியவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து