முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

26 ஆயிரம் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணியாளர்கள் 26 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று மின்துறைஅமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபானத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ. 5 கோடி வழங்கப்படும். மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 26,056 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சில்லறை விற்பனைப் பணியாளர்களான மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் முறையே ரூ. 500, ரூ. 400 மற்றும் ரூ. 300 என தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த ஊதிய உயர்வு முறையே ரூ.750, ரூ.600 மற்றும் ரூ.500 என உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ. 2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வுகள் ஏப்ரல், 2019 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 7,074 மேற்பார்வையாளர்களும், 15,435 விற்பனையாளர்களும் மற்றும் 3,547 உதவி விற்பனையாளர்களும் பயன்பெறுவர். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ. 62.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மதுவகைகள் ஆகியவற்றின் கடத்தல்களைக் கண்டுபிடித்து கைப்பற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலர்களுக்கும் மற்றும் அவர்களுக்கு உதவும் உள்ளூர் காவலர்களுக்கும் ஊக்க நிதியினை ரூ.10 லட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்ட வெகுமதி இந்த ஆண்டு ரூ. 15 லட்சம் என உயர்த்தி வழங்கப்படும். கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைந்துள்ள போதை மீட்பு மையங்களுக்கு ரூ. 3.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து