பாகிஸ்தான் மருத்துவமனையில் 360 கிலோ எடையுடையவர் உயிரிழந்த பரிதாபம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      உலகம்
Pakistan- hospital-360 kg Weight 2019 07 09

பாகிஸ்தானில் 360 கிலோ எடை கொண்டவர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் சாதிக்காபாத்தை சேர்ந்தவர் நூருல் ஹசன். 55 வயதான இவர் 360 கிலோ எடையுடன் மிகவும் பருமனாக காணப்பட்டார். கடந்த மாதம் 28-ம் தேதி நூருல் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முன்னதாக நூருல்லாவால் எழுந்திருக்க முடியாது என்பதால் அவரை ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக லாகூர் அழைத்து செல்வதற்கு ராணுவ ஜெனரல் கமார் ஜவாத் பஜ்வா அறிவுறுத்தியிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் நூருல் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் நோயாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினார்கள். மருத்துவமனையை தாக்கியதால் அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் ஊழியர்கள் உள்ளிட்டோர் அலறி கூச்சலிட்டபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நூருலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அங்கு பணியில் இருந்து செவிலியர்கள் வெளியேறி இருந்ததால் நூருலை கவனிக்க யாரும் இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கடந்தும் அவருக்கு சிகிச்சையளிக்க யாரும் இல்லாததால் நிலைமை கவலைக்கிடமானது. பின்னர் அங்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த மற்றொரு நோயாளியும் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து