கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி: குளச்சல் தொகுதி உறுப்பினரின் கேள்விக்கு முதல்வர் பதில்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று குளச்சல் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வேண்டி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

 கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், மண்டைக்காடு புதூர் என்னுமிடத்தில் கடந்த 16.6.2019 அன்று புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி சகாயராஜ் என்பவரின் மகன் செல்வன் சகாய ரெகின், ஸ்டேன்டர் என்பவரின் மகன் செல்வன் இன்பென்டர் ரகீட் மற்றும் மிக்கேல் நாயகம் என்பவரின் மகன் செல்வன் சச்சின் ஆகிய மூன்று சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சச்சின் உடல் 16.6.2019 அன்றும், சகாய ரெகின் என்பவரது உடல் 17.6.2019 அன்றும், இன்பென்டர் ரகீட் என்பவரது உடல் 18.6.2019 அன்றும் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து