ஒருவரை மட்டும் விடுவிப்பது எப்படி நியாயமாகும்? ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை குறித்து கவர்னரே முடிவெடுப்பார் - தி.மு.க.வின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi response dmk 2019 07 09

சென்னை : நளினியை மட்டும் விடுதலை செய்தால் போதும். மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றினீர்கள். ஒருவரை மட்டும் விடுதலை செய்வது எப்படி நியாயம் ஆகும். 7 பேர் விடுதலை விவகாரத்தில் நாங்கள் சரியாக செய்திருக்கிறோம். அது பற்றி கவர்னர்தான் முடிவெடுப்பார் என்று சட்டசபையில் தி.மு.க.வுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் கேள்வி ஒன்றை எழுப்பினார். ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரின் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்தின் நிலை என்று கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் மட்டும் போதாதது. விடுதலை குறித்து எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முதல்வர் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளி்க்கையில், தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக கவர்னர்தான் முடிவு எடுப்பார் என்றார். அதற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், அந்த தீர்மானம் பற்றி முடிவு எடுப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது என்று வலியுறுத்தினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். உங்கள் தலைவர் முதல்வராக இருந்த போது இந்த மன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. நளினியை மட்டும் விடுதலை செய்தால் போதும். மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றினீர்கள். ஒருவரை மட்டும் விடுதலை செய்வது எப்படி நியாயம் ஆகும். இது முறையானது அல்ல. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். நாங்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளோம். நாங்கள் சரியான முடிவு எடுத்துள்ளோம். தீர்மானம் குறித்து கவர்னர் முடிவு எடுப்பார் என்று முதல்வர் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், உங்கள் ஆட்சியில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் போட்டதாக தெரிவிக்கிறீர்கள். நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அமைச்சரவையில் தீர்மானம் போட்டீர்கள். ஆனால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு பின்னரே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நீங்கள் அதை செய்யவில்லை. தமிழக அரசு அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து