மீண்டும் தலைவர் பதவியேற்க சோனியாவிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      இந்தியா
sonia 2019 05 27

பல முறை சமரசம் செய்தும் ராகுல் காந்தி மனம் மாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும் படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல முறை சமரசம் செய்தும் ராகுல் காந்தி மனம் மாறவில்லை. தேர்தல் தோல்வியால் அவர் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார். மேலும் தனது குடும்பத்தில் இருந்து யாரையும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள ராகுல் புதிய தலைவர் தேர்வில் தலையிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் உள்ளது.

ராகுலின் பிடிவாதம் நீடிப்பதால் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனகார்கே, அசோக்கெலாட் உள்பட சிலரது பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.  இதையடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது, கட்சி தலைவர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சோனியா அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். என்றாலும் சோனியாவை விட்டால் காங்கிரசை வழி நடத்த வேறு தலைவர்கள் இல்லை என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே சோனியாவை மூத்த தலைவர்கள் மீண்டும், மீண்டும் சந்தித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் படி தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

தற்போது சோனியாவுக்கு 72 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என்ற மனநிலையில் சோனியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை மூத்த தலைவர்கள் தற்காலிகமாவது தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். அதை சோனியா ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து