முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் தனிநபர் மசோதா நிறைவேறுமா? பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு பெரும் எதிர்பார்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் தனிநபர் மசோதா நிறைவேறி சட்டம் ஆகுமா? மோடி இதில் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

தேர்தல்களில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கக் கோரி, பா.ஜ.க. உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் லோக்சபாவில் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்ற போது, சக பா.ஜ.க. உறுப்பினர்களான அஜய் டேனி மிஸ்ரா, நிஷிகாந்த் துபே, பிஜு ஜனதாதள உறுப்பினர் பார்த்ருஹரி மகதாப் ஆகியோர் மசோதாவுக்கு எதிராக பேசினர். இந்த விவாதம் இனிவரும் நாட்களிலும் தொடர உள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி, 9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குஜராத் முதல்வராக இருந்த போது, கடந்த 2010-ம் ஆண்டு, அம்மாநில உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க திட்டமிட்டார்.

ஆனால், அப்போது குஜராத் கவர்னரான கமலா பேனிவால், அம்முயற்சியை கடுமையாக எதிர்த்தார். கருத்துரிமையையும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமையையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ)-வது பிரிவை மீறும் வகையில் இந்த முயற்சி இருப்பதாக கூறி, அவர் முட்டுக்கட்டை போட்டார். இதனால் மோடியால் அதை செயல்படுத்த முடியவில்லை. அவர் பிரதமரான பிறகு, குஜராத் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் பொறுப்பேற்றார். அவர் மோடியின் முயற்சியை கையில் எடுத்தார். அதன் பலனாக, ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்கும் மசோதா, குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மோடி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ.பி. கோலி, ஒப்புதல் அளித்ததால் அந்த மசோதா சட்டமானது. இந்த வகையில், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கிய முதல் மாநிலம் என்ற பெயரை குஜராத் பெற்றது. இருப்பினும், குஜராத் ஐகோர்ட் அந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளதால், இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இப்போது லோக்சபாவில் தனிநபர் மசோதா மூலம் அப்படி ஓர் வாய்ப்பு, அதாவது மீண்டும் நாடு முழுவதும் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் வகையில் தனிநபர் மசோதா நிறைவேறி சட்டம் ஆகுமா? மோடி இதில் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து