முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2 விண்கலம்: ஜனாதிபதி பார்வையிடுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

இன்று காலை 2.51 மணிக்கு சந்திராயன் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார். விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலத்துக்கான கவுண்டவுன் நேற்று  6.15- மணிக்கு தொடங்கியது.
கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரயான் -2 விண்கலம் செலுத்தப்படுகிறது. சந்திரயான் -2 திட்டத்தின் படி நிலாவை சுற்றி வலம் வந்து ஆய்வு செய்யும் 2,379 கிலோ எடை கொண்ட (ஆர்பிட்டர்) விண்கலம், நிலாவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் 1,471 கிலோ எடைகொண்ட (லேண்டர்) கலம், நிலாவின் தரையில் 500 மீட்டர் வரை ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் 27 கிலோ எடைகொண்ட (ரோவர்) கலம் என மூன்று அமைப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்த மூன்றிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ் ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ரெட்ரோ ரிப்ளெக்டர் என்ற கருவியையும் சந்திரயான்-2 நிலாவுக்கு கொண்டு செல்ல உள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும் இந்த வெற்றி பேருதவியாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரயான் 2 ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு அடுத்து ராக்கெட் ஏவுதலை நேரில் பார்க்க வரும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகின்றனர். இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சந்திரயான்-2 ஏவுதல் நிகழ்வை, ஸ்ரீஹரிகோட்டாவில் நேரடியாக அருகில் இருந்து பார்ப்பதற்கு பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ராக்கெட் ஏவுதல் நிகழ்வை பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் பிரத்யேகமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இஸ்ரோ இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. இதற்கிடையே, சந்திரயான்-2 விண்கலத்துக்கான கவுண்டவுன் நேற்று 6.15-க்கு தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் இன்று காலை ஸ்ரீஹெரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது.

இதுவரை அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுபோன்று நிலவின் பரப்பில் ஆய்வுக் கலன்களை மெதுவாக தரையிறக்கும் முயற்சியை 38 முறை மேற்கொண்டுள்ளன. அதில் பாதிக்கு பாதி என்ற அளவில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன. அதிலும் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. இப்போது, முதன்முறையாக மெதுவாக தரையிறக்கும் முயற்சியை இந்தியா மேற்கொள்ள உள்ள நிலையில், இத்திட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தால், உலக அளவில் நிலவின் தரையில் மெதுவாக ஆய்வுக் கலத்தை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமை கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து