முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: டாக்டர்களுக்கு துணைஜனாதிபதி அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

அரசு பள்ளிகளில் சென்று மாணவ, மாணவிகளுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு துணைஜனாதிபதி வெங்கய்யநாயுடு அறிவுறுத்தியுள்ளார். 

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது பேச்சை தமிழில் துவங்கினார். சென்னை வருவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர் பேசியதாவது, 

தமிழக மக்களின் நிலமும் மனமும் செழிப்பாக உள்ளது. எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை, ஜெயலலிதா முதல் கருணாநிதி வரை சினிமா என்றாலும், விவசாயம் என்றாலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது. கலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் வரலாறு என்று அனைத்திலும் தனிச்சிறப்பு கொண்டது தமிழ்நாடு. உலகம் முன்னேறிச் செல்லும் வேகத்திற்கு ஏற்ப நாமும் முன்னேறி செல்ல வேண்டும்.நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும், தமிழகம் சுகாதாரத் துறையிலும் முன்னேறி உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், மக்களின் தேவையறிந்து அரசு செயல்பட வேண்டும்.

இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுடன் பார்க்கும் பொழுது 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தமிழகம் சுகாதாரத் துறையிலும் முன்னேறி உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால் மக்களின் தேவையறிந்து அரசு செயல்பட வேண்டும். தமிழகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவர்களும் தங்களது பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சென்று மாணவ, மாணவிகளுக்கு நோய் குறித்த விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். உணவு பழக்கவழக்க முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ததன் மூலம், ஆரோக்கியம் மேம்பட்டு வருகிறது. இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் நாடு இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறிய அவர், சுகாதாரத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதது, மருத்துவர் - நோயாளிகள் விகிதாச்சாரக் குறைவு, மக்கள் வருமானத்தை மீறி மருத்துவ செலவு செய்ய வேண்டிய நிலை, கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாதது, சுகாதார காப்பீடு திட்டம் அதிக மக்களை சென்றடையாதது மற்றும் தடுப்பு மருத்துவ குறைபாடு போன்றவையே சவால்களாக உள்ளன. நகரப்பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகள், கிராமப் பகுதிகளை இன்னும் சென்றடையவில்லை என்றும், இந்த குறைபாட்டைக் களைய தனியார் துறையினர் கிராமப் பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நவீன சுகாதார வசதிகள் கிராமப் பகுதிகளுக்கு சென்றடைய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில், தனியார் பங்களிப்பும் அவசியம்.

தகுதியான மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை கவலையளிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். தற்போதைய நிலையில், நாட்டில் ஆறு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகிறது.  ஆரோக்கியமான மாநிலங்கள் முன்னேறும் இந்தியா என்ற தலைப்பில் நித்தி ஆயோக் வெளியிட்டுள்ள 2009-ம் ஆண்டுக்கான சுகாதார குறியீடுகளின்படி, தென்மாநிலங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நோயை கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை அளிப்பதில் மக்களிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் அளவிற்கு, மருத்துவமனைகள், நவீன தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும். அதிக அளவிலான வெளிநாட்டவர் சென்னைக்கு மருத்துவ சுற்றுலாவாக வருவது, இந்தியா இத்துறையில் வேகமாக முன்னேறி வருவதையே எடுத்துக்காட்டுகிறது. கென்யா, நைஜீரியா, தான்சானியா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஓமன், ஏமன், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற வகையான சிகிச்சைக்காக, சென்னை மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து