முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியே இல்லை என்கிறபோது கொள்கை முடிவு எதற்கு? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் ஒருபோதும் அனுமதியில்லை என்கிறபோது சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுத்து எதற்காக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாகப் பதில் அளித்தார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அது குறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, பாராளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தமிழக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, தமிழகத்தில் மீதேன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும், 7 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2 திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், மேலும் பல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது தொழில்துறை அமைச்சர் பதில் அளிக்கையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும், அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தது அவையில் பதிவாகி உள்ளது.

அதேபோல் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டத்துறை அமைச்சர் பதில் அளிக்கையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும், இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து அதை சட்டசபையில் அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பு மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், டெல்டா மாவட்டங்களில் பதட்டம் நிலவி வருகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய நல்லகண்ணு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார். நாங்களும் இதனை ஒத்துக்கொள்கிறோம். மத்திய அரசு ஒற்றை லைசென்ஸ் முறையில், ஹைட்ரோ கார்பன் எடுக்க நிறுவனங்களுக்கு ஏலம் விடுகிறது. மத்திய அரசு அனுமதி வழங்கியபோதிலும், தமிழகத்தில் அந்த திட்டத்தை துவக்கவோ, ஆய்வு செய்யவோ, உற்பத்தி செய்யவோ அனுமதி இல்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அனுமதி பெற்றே ஆக வேண்டும். இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் விண்ணப்பம் அளித்த எந்த நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த திட்டம் தொடர்பாக அம்மா குழு அமைத்து, அந்த குழுவின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தார்.அதே கொள்கையை தற்போது தமிழக முதல்வரும் எடுத்து வருகிறார். விவசாயிகளுக்கு பாதிப்பு என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பதாலும், நிபுணர் குழு அறிக்கைப்படி ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பித்த எந்த நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதுபோல் எடுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினால், அதற்கு அரசு பொறுப்பு ஆகாது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதிக்காத நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அதை தான் நாங்களும் கேட்கிறோம். எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறும்போது, விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில், இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என்கிறபோது கொள்கை முடிவு எதற்கு? நீதிமன்றமும் இதே கேள்வியை எழுப்பி இருக்கிறது. பின்னர் எதற்காக போராட்டம் நடத்தி அச்சுறுத்த வேண்டும். இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

மத்திய அரசு புதிய ஏல முறையை அறிவித்து வெப்சைட்டில் விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது, நிறுவனங்கள் விண்ணப்பித்து பொதுஏலம் மூலம் ஒதுக்கீடு பெறுகின்றன. மத்திய அரசிடம் ஒதுக்கீடு பெற்ற போதிலும், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது தொடர்பாக சட்டத்தில் இடம் இருக்கிறது. அதற்கான விதிமுறைகளும் உள்ளன. எனவே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆரம்பிக்க முடியாது. இப்படி இருக்கும்போது கொள்கை முடிவு எதற்காக?தமிழக அரசின் அனுமதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவக்க நினைத்தால், மாநில அரசு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து