முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கன அடி காவிரி தண்ணீர் திறப்பு - பிலிகுண்டுலு வழியாக ஒகனேக்கலுக்கு வந்தடையும்

புதன்கிழமை, 17 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவுப்படி கபினி அணையில் இருந்து 500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் நடந்த போது காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மழைக் காலத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

மாண்டியா மாவட்ட விவசாயிகள் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்தும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் குமாரசாமி கூறினார். இதற்கிடையே கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் அமைச்சர் புட்டர்ராஜூஆலோசனை நடத்தினார். இதில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் தற்போதுள்ள நீரின் அளவு, தென்மேற்கு பருவ மழை நிலவரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவுப்படி கபினி அணையில் இருந்து 500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து மொத்தம் 855 கனஅடி அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் நேற்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கர்நாடகா மாநிலம் குடகு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து குடகு பகுதியில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மிதமான மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து