முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு, தென்காசி, தனி மாவட்டங்களாக உதயம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டமும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தலைநகராக புதிய மாவட்டமும் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தற்போது பெரிய மாவட்டங்களாக உள்ள திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்படுவர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிதிராவிட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அனைத்து வசதிகளுடன் மகிழ்ச்சியாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடும் வகையில், மதுரை மாவட்டம் - கே.புளியங்குளம், கரூர் மாவட்டம் -வாங்கல் குச்சிபாளையம், தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் - 82 கவுண்டம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் - ரெங்கசமுத்திரம் ஆகிய 5 கிராமங்களில், அனைத்து வசதிகளுடன் கூடிய 5 சமுதாயக் கூடங்கள், தலா ஒரு கோடி ரூபாய் வீதம் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதகமான பருவ நிலையின் காரணமாக 3,702 ஹெக்டர் பரப்பளவில் ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, ஜெர்பரா, கார்னேஷன் ஆகிய மலர்கள் பயிரிடப்பட்டு 39,383 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் மலர்கள், உள்ளூர் சந்தைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் சந்தைப்படுத்தப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பெங்களூருவில் உள்ள ஏல மையம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள், விற்பனையாளர்கள், மலர் ஏற்றுமதியாளர்கள் ஆகியோரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. அவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, சர்வதேச மலர்கள் ஏல மையம் ஒன்று 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஓசூரில் அமைக்கப்படும். சர்வதேச அளவில் கொள்முதல் செய்ய ஏதுவாக, மின்னணு வசதியுடன் கூடிய ஏலக்கூடம், சிப்பம் கட்டும் கூடம், அலுவலகக் கட்டிடம், தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், குளிர்பதன அறை போன்ற வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்படும். இம்மையம், மலர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவதுடன் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அந்நிய செலாவணியையும் அதிகரிக்கும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து