கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
Ramaswamy Padayacharya -cm 2019 07 19

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் திருவுருவப் படத்தை  திறந்து வைத்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழும் போதே வரலாறாக வாழ்ந்த ராமசாமி படையாச்சியாரின் முழு திருஉருவப் படத்தை வரலாற்று சிறப்புமிக்க நம்முடைய சட்டமன்றத்தில் திறந்து வைக்கும் இந்த விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன், நமது சட்டப் பேரவை வரலாற்றில் இது ஒரு சிறப்பான நிகழ்வாகும். நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்த நல்லவர்களை சிறப்பிப்பதில், மரியாதை செலுத்துவதில், அம்மாவும், அம்மாவின் அரசும் முன்மாதிரியாக திகழ்கிறது.  அந்த வகையில், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியாரின்   தன்னலமற்ற உழைப்பை  பெருமைப்படுத்தவும், அன்னாரின் நினைவை சரித்திரம் போற்றும் வகையிலும், அன்னாரின் முழு உருவப் படத்தை  இம்மாமன்றத்தில் நிறுவுவதில் அம்மாவின் அரசு பெருமைப்படுகிறது.

இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால், அந்த வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்டத் தலைவர்களின் தியாகங்கள் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.  அப்படிப்பட்ட தியாக சீலர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தான் ராமசாமி படையாச்சியார். 1952-ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை தோற்றுவித்து, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராமசாமி படையாச்சியார் உட்பட உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த 19 வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை தேர்தலிலும், இக்கட்சியை சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.  மக்கள் பணியாற்றுவதில் மற்ற தலைவர்களுடன் இணக்கமாக பணியாற்ற ராமசாமி படையாச்சியார் தயங்கியதில்லை.

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் ராமசாமி படையாச்சியார் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர் 1980 மற்றும் 1984 -ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனிலும்,  முன்னேற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்ட தலைவர்களில் முதல்வரிசை தலைவராக திகழ்ந்தவர் அவர். மிகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தவர்.  குறிப்பாக, வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத ஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய முதல் தலைவர் இவர்தான்.

தீர்மானம் நிறைவேற்றியது முக்கியமல்ல.  அந்த தீர்மானம் வெற்றி பெற  தொடர் முயற்சி மேற்கொள்வதில் தான்  அந்த தீர்மானத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தவர். பின்தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அந்த உன்னத தலைவர் இந்த நாட்டில் பிறந்ததும், வாழ்ந்ததும் நாம் செய்த பாக்கியம்  என்பதால், அவர் பிறந்த நாளான செப்டம்பர் 16-ம் நாள், அரசு விழாவாக  கொண்டாடப்படும் என்று 29.6.2018 அன்று நான் சட்டமன்றத்தில் அறிவித்தேன். 

மேலும், ராமசாமி படையாச்சியார் பிறந்த கடலூர் மாவட்டத்தில், அரசு சார்பாக நினைவு மண்டபமும், அதில் அன்னாருடைய ஒரு முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்க வேண்டும் என்று வன்னியர்குல பெருமக்களும், அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.  அதனை முழு மனதாக ஏற்று, 19.7.2018 அன்று மேட்டூரில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபமும். முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று நான்  உறுதியளித்தேன். வாக்குறுதி கொடுத்ததோடு நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி தான் என்பதை அம்மா பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர்களிடம் குருகுல பயிற்சி பெற்ற நாங்களும், சொன்னதை செய்வோம். சொல்லாததையும் செய்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் 1.5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி, அதில் நினைவு மண்டபமும்,  திருஉருவ வெண்கலச் சிலையும் அமைக்க 14.9.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன்.  இம்மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து