காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi assembly 2019 07 19

காவல்துறையினருக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான மானிய கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தி.மு.க. சார்பில் உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் காவல்துறையினருக்கு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1980-ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் துவக்கப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் 1989-ல் அது நிறுத்தப்பட்டது. பின்பு 1991-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்தவுடன் அது மீண்டும் துவக்கப்பட்டது. சிலை கடத்தல் பிரிவு 1983-ம் ஆண்டு துவக்கப்பட்டது. காவலர்களுக்கு மானிய விலையில் பொருட்கள் முதன்முறையாக வழங்கப்பட்டது அ. தி.மு.க. ஆட்சியில் தான். 1991-ம் ஆண்டு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கென தனியாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். 13.4.1992 அன்று அனைத்து மகளிர் காவல் நிலையம் துவக்கி வைக்கப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின் தான். 1993-ம் ஆண்டு சிறப்பு இலக்குப்படைஏற்படுத்தப்பட்டது. 1994-ம் ஆண்டு கடலோர பாதுகாப்புக் குழுமம் ஏற்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காவலர்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற அடிப்படையிலே, காவலர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டம் என்பது இன்றைக்கு ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். அந்த திட்டத்திலே மேலக்கோட்டையூரில் என்ற கிராமத்திலே 7.60 ஏக்கரில் 2,673 வீடுகள் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ஜெயலலிதா வழங்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல், அதை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக கீழக்கோட்டையூரில் 52.40 ஏக்கரில் அங்கேயும் காவலர்களுக்கு சொந்த இல்லம் திட்டத்தின் மூலமாக வீடு கட்டுவதற்காக அரசு பரிசீலித்து கொண்டி ருக்கிறது. இந்த சொந்த இல்ல திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று இன்றைக்கு அரசு திட்டமிட்டு இருக்கின்றது. அந்த திட்டம் விரிவுபடுத்துவதற்கும் அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டு இருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி திட்டத்தின் கீழ் இயற்கை எய்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ. ஒரு லட்சத்தில்  இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ரூ. ஒரு லட்சமாக இருந்த காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கு பணிச்சுமை மற்றும் குடும்ப சூழ்நிலை  காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்க பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 10 கோடி அரசு வழங்கியுள்ளது. 14.75 கோடியில் 5 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 97.74 லட்சம் செலவில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும். 72,000 காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும். காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்படும். 4-வது காவலர் ஆணையம் அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது. தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, தருமபுரி மாவட்டங்களில் ரூ.14.75 கோடியில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். ரூ. 8.54 கோடியில் 1500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் வழங்கப்படும். ரூ.ஒரு கோடி செலவில் 50 ஆளில்லா விமானங்கள், டிரோன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்கள் வாங்கப்படும். 14 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள், மெரினாவில் மீட்பு பணிகள் நிலையம் ரூ. 17. 25 கோடியில் அமைக்கப்படும். 4 மீட்டர் உயரம் கொண்ட வான்நோக்கி நகரும் ஏணியுடன் கூடிய ஊர்தி ரூ. 121 கோடியில் வாங்கப்படும். சென்னை வேப்பேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து