உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நான்கு மசோதாக்களை நேற்று தாக்கல் செய்தார். அதில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்க வழிவகை மசோதாக்கள் தாக்கல் செய்திருந்தார். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் இந்த மசோதாக்கள் வகை செய்கிறது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு தேசிய தகவல் மையம் 95 நாட்கள் அவகாசம் கேட்டுக்கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்கு முன்னர் உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் ஆஸ்டின், ரங்கநாதன் ஆகியோர் அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆவடி மாநகராட்சி உருவாக்குவதற்கும் அதற்கு தனி அதிகாரி நியமிப்பதற்குமான மசோதாவையும் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.