முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டம் ஒரு மிகப்பெரிய சாதனை என சர்வதேச எரிசக்தி நிறுவனம் பாராட்டு தெரிவித்து உள்ளது.  

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஏழை குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை முந்தைய பா.ஜனதா அரசு கொண்டு வந்தது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற இந்த திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
இந்த திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டுக்குள் 8 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 7.4 கோடி இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன. இது மட்டுமின்றி கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா அரசு பொறுப்பேற்றது முதல் நாட்டின் கியாஸ் இணைப்புகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து இருக்கிறது.

அந்தவகையில் 26 கோடிக் கும் மேற்பட்ட இணைப்புகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் நாட்டின் 90 சதவீத மக்கள் இணைப்பு பெற்றிருக்கும் நிலையில், 2020-21-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களும் கியாஸ் இணைப்பு பெறுவதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

மத்திய அரசின் இந்த இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தை சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெகுவாக பாராட்டி உள்ளது. இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனரான பதி பிரோல் டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது:-

கிராமப்புறங்களில் சமையலுக்காக விறகுகளையும், வேளாண் கழிவுகளையும் பயன்படுத்துவதால் சுவாசம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் குழந்தைகள், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமையல் கியாஸ் இணைப்புகளால் ஒரு தூய்மையான சுற்றுச்சூழல் உருவாகிறது.

இந்தியா முழுவதும் ஏழை குடும்பங்களுக்கு 2020-ம் ஆண்டுக்குள் கியாஸ் இணைப்பு வழங்குவது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும். இது ஒரு எரிசக்தி பிரச்சினை அல்ல. இது ஒரு பொருளாதார பிரச்சினை. இது ஒரு சமூக பிரச்சினை. அந்த வகையில் இது ஒரு சமூக, பொருளாதார சாதனை ஆகும்.

இந்தியா, அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கி கடந்த ஆண்டு சாதனை படைத்தது. விரைவில் அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவும் ஒரு மிகப்பெரும் சாதனை ஆகும்.

2022-ம் ஆண்டுக்குள் சோலார் போன்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் 175 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆனால் இதே வேகத்தில் சென்றால் இலக்கை அதிகரித்து திருத்தப்பட வேண்டும். இவ்வாறு பதி பிரோல் கூறினார். மத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை உலக சுகாதார நிறுவனமும் கடந்த ஆண்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து