முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அ.தி.மு.க - காவிரி பிரச்சனையில் கிடைத்த வாய்ப்பை தவற விட்டது தி.மு.க. - சட்டசபையில் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி விவகாரத்தில் சட்டப்  போராட்டம் நடத்தி அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் கிடைத்த வாய்ப்பை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

சட்டசபையில் பொதுத்துறை, நிதி மற்றும் வீட்டு வசதித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது,

காவிரி தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை ஆகும். காவிரியை நம்பித்தான் மெகா கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்காமல் மத்திய அரசு தவிர்த்து வருகிறது. தற்போது 66 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வேகமாக ஈடுபட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்றத்தை மீறும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பேசினார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசுகையில்,

நிரந்தர தலைவர் அமைப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை குறித்தும், வழக்குகள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரதமரையும், புதிதாக பொறுப்பேற்ற நீர்வளத் துறை அமைச்சரையும் சந்தித்து முறையிடப்பட்டிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகி விடும். எனவே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் அதிக அதிகாரம் குவிந்துள்ளது. மத்தியில் 17 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த போது, காவிரி நதிநீர் விஷயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள். எதிர்க்கட்சி தலைவர் தற்போது இலவச ஆலோசனை வழங்குகிறார் என்றார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும் போது, தங்களது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக குறிப்பிட்டார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது,

காவிரி பிரச்னை பற்றி பேசி கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது, அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கிடைத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த தவறி வீட்டீர்கள். நீங்கள் பயன்படுத்தியிருந்தால், நிரந்தர தீர்வை பெற்றிருக்கலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுத்தான் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை. 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கிடைத்த பின்னர் 2 மாத காலம் மத்திய ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பிரச்னைக்கு வேலையில்லாமல் போய் இருக்கும். ஆனால் தவறு செய்தவர்கள் நீங்கள் தான் என்றார்.

அமைச்சர் ஜெயகுமார் குறுக்கிட்டு, முதல்வரும் நான் கூறிய கருத்தைதான் தெரிவித்திருக்கிறார். 17 ஆண்டு கால மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தீர்கள். நீங்கள் செயல்பட்டு இருந்தால், ஜீவாதார பிரச்னை நீங்கியிருக்கும் என்றார். பின்னர் துரைமுருகன் எழுந்து பேசுகையில், காவிரி நடுவர் மன்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்டதே கருணாநிதி ஆட்சி தான் என்றார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சத்தமாக பேசினால் உண்மையாகி விடும் என நினைக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையான காவிரி நதிநீர் விஷயத்தில் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் 2 மாத காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அதை பயன்படுத்தி இருந்தால், வழக்கு தொடராமல் தடுத்திருக்க முடியும். ஜெயலலிதா தான், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் இடம் பெற செய்ய தமிழக உரிமையை நிலைநாட்டினார். ஆனால் நீங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் தவற விட்டீர்கள். அதிகாரம் என்பது ஒரு முறை தான் கிடைக்கும். அதை நீங்கள் தவற விட்டீர்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் பேசும் போது,  இறுதி தீர்ப்பில் குறைபாடு இருந்தால், அது தொடர்பாக முறையிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. 2 மாதத்தில் என்ன செய்ய முடியும் என்றார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சமாளிக்க பார்க்கிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திருக்கும். போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார். அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரி நதி நீர் தொடர்பாக பலமுறை இங்கு பேசி விவாதம் நடைபெற்றுள்ளது. எது உண்மை என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இது பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால், எங்களிடமிருந்து பதில் வந்து கொண்டே இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து