முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு நிதி - ரூ.3 லட்சமாக அதிகரிப்பு: முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நியாயவிலை கடை ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 2 லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்பப் பாதுகாப்பு நிதியினை உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையினை கனிவோடு பரிசீலனை செய்த அரசு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு தற்போது வழங்கப்படும் குடும்ப நல நிதி 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கும்.

கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, குடும்ப நல நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் முன்பணம், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிப்படி, 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து, பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கு, அவர்களது மாத சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 3,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 3 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். 5,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்கள், தலா 14 லட்சம் ரூபாய் வீதம் 3.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ஐந்து கால்நடை மருந்தகங்கள் தலா 50 லட்சம் ரூபாய் வீதம் 2.50 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இரண்டு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் பெரு மருத்துவமனைகள் தலா 1.20 கோடி ரூபாய் வீதம், 2.40 கோடி ரூபாய் செலவில், 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து