மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi speech 2019 07 21

சேலம் : மத்திய அரசின் அணை பாதுகாப்பு திட்ட மசோதா தமிழகத்திற்கு உகந்ததாக இல்லையென்றால் எதிர்ப்போம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- நிதி நிலைமை குறித்து ரூபாய் 30 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று துணை முதல்வர் சொல்லியிருக்கின்றாரே?

பதில்:-  சட்டமன்றத்திலே இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வர் இருக்கின்ற நிதிநிலைமை பற்றி உரிய பதிலை சட்டமன்றத்தில் தெளிவாக சொல்லியிருக்கின்றார். அனைத்து ஊடகங்களிலும் அது வந்துள்ளது. அரசின் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி:-  நிதியைப் பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்?
பதில்:-  நம்முடைய மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கி நம்முடைய தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே, நம்முடைய நிதியை பெறுவதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- அணை பாதுகாப்பு மசோதாவிற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்?
பதில்:- அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒரு முறை கொண்டு வந்தார்கள், அப்படிக் கொண்டு வருகின்ற பொழுது, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்து அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கினார்கள். மீண்டும் கொண்டு வந்தால் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலே எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்.
கேரளாவில் கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்திக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க வேண்டுமானால் நம்முடைய அணைகளை நாம் பராமரிக்கக் கூடிய சூழ்நிலையை, திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று கடந்த கூட்டத்  தொடரிலேயே நாங்கள் கூறினோம். ஆனால், கொண்டு வராத காரணத்தால் சட்டம் நிறைவேற்ற முடியவில்லை, இப்பொழுது எந்த வடிவத்தில் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை. ஆகவே, நமக்கு பாதுகாப்பான சட்டத்தைக் கொண்டு வந்தால் நாம் ஏற்போம். நம்முடைய மாநிலத்திற்கு உகந்ததாக இல்லையென்றால் அதை எதிர்ப்போம்.
கேள்வி:-  ராசிமணல் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?
பதில்:-  எந்தவொரு மாநில அரசும் அணை கட்டவோ, நீரை மறுபக்கம் திருப்பவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். அந்தத் தீர்ப்பு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி நான்கு மாநிலங்களாலும் பின்பற்றப்படவேண்டும்.
கேள்வி:-  அத்திவரதர் சிலையை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை குறைக்க இடமாற்றம் செய்யப்படுமா?
பதில்:-  நேற்று உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அறநிலையத் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், டி.ஜி.பி. கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தற்போது தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும். கோவில் குருக்களிடத்தில் வேறு ஏதாவது இடத்தில் வைக்க முடியுமா என்பது குறித்தும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிரமமின்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
கேள்வி:-  கர்நாடகா நிலையைப் பற்றி ஒரு முதல்வராக நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்:-  இது அம்மாநிலப் பிரச்சினை. அதில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது.
கேள்வி:-  சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கான ஏலம் அறிவித்திருக்கின்றார்களே?
பதில்:-  அம்மா காலத்திலேயும், அதைத் தொடர்ந்து அம்மாவினுடைய அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாதென்று குரல் கொடுத்திருக்கின்றோம். தொடர்ந்து குரல் கொடுப்போம்.
கேள்வி:-  உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது நடக்கும்?
பதில்:-  உள்ளாட்சித் தேர்தல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டதென்ற வரலாறு உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதன்பிறகு, வார்டு வரையறை முடிவு பெற்று விட்டது. உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் அறிவிப்பை அந்த அபிடவிட்டில் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
கேள்வி:-  நிலத்தடி நீர் பாதிக்கப்படும்...
பதில்:-  நீரை மிச்சப்படுத்தி முழுவதையும் பயன்படுத்துவது தான் நம்முடைய நோக்கம். நீர் மேலாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தி, பொறியாளர்களை வைத்து, இருக்கின்ற தண்ணீரில் ஒரு சொட்டுகூட வீணாகாமல்  பாதுகாக்கப்படும். இதற்கு விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும்.  மேட்டூர் கிழக்கு, மேற்கு இரண்டு கால்வாய்களிலும்  கான்கிரீட் தளம் அமைக்கின்ற பொழுது 20 சதவிகித நீர் மிச்சமாகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து