சேலம் தலைவாசலில் 900 ஏக்கரில், ரூ.1,000 கோடியில் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா - சேலம் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi speech 2019 07 22

சேலம் : ஓசூரில் உலகத்தர மலர் ஏல மையம் அமைக்கப்படும் என்றும், சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ. ஆயிரம் கோடியில் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான கால்நடை பூங்கா ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற வங்கிக் கடன் வழங்கும் விழா நிகழ்ச்சியில் தமி்ழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழ்நாடு கிராம வங்கி என்று பெயரைப் பார்க்கும் பொழுதே கிராமத்தினுடைய அக்கறை கொண்ட ஒரு வங்கி தமிழ்நாடு கிராம வங்கி ஒன்றுதான். மற்ற வங்கிகளில் எளிமையாக கடன்  பெற முடியாது.  ஆனால், தமிழ்நாடு கிராம வங்கியைப் பார்க்கின்ற பொழுது முழுக்க, முழுக்க விவசாயிகளை சார்ந்த தொழில்களுக்கும், ஏழை எளியவர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அந்த அமைப்புகளுக்குத் தேவையான உதவி வழங்குவதற்காக இந்த வங்கி முன்னுரிமை கொடுக்கிறது. இந்த வங்கியில் வட்டி குறைவாக இருக்கின்றது.  மேலும், கேட்ட நேரத்திற்கு உங்களுக்குத் தேவையான நிதி உதவியையும் இந்த வங்கி அளித்து வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன், பால் உற்பத்தி செய்ய கடன் போன்றவை இந்த வங்கி கொடுக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே அதிக பால் உற்பத்தியாளர்களைக் கொண்ட மாவட்டமாகவும், பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதும் நம்முடைய சேலம் மாவட்டம்தான். பால் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவையான கால்நடைகளைப் பெற்று, வளர்ப்பதற்கு ஒரு நபருக்கு ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு கிராம வங்கி வழங்குவதாக இந்த வங்கியின் அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற  விவசாயக் குடிமக்கள், விவசாயத் தொழிலாளர்கள் எல்லோரும் தமிழ்நாடு கிராம வங்கியின் மூலமாக கடனுதவி பெற்று அங்கே கறவை பசுமாடுகளை வளர்த்து, அதன் மூலமாக பாலை கறந்து ஆங்காங்கே இருக்கின்ற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கின்ற பொழுது அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அண்மையில் சட்டமன்றத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை பிரித்தேன். திருநெல்வேலியை பிரித்து தூத்துக்குடிக்கு கொடுத்தேன், திருச்சியை பிரித்து கரூரில் கொடுத்தோம், கிருஷ்ணகிரியை பிரித்து தர்மபுரிக்கு கொடுத்தோம்.  இப்படி பல இடங்களில் புதியபுதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை நிறுவுகின்றபொழுது, அந்தப் பகுதியில் இருக்கின்ற பால் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக கால்நடைகளை வளர்த்து பால் உற்பத்தியை பெருக்குவது மட்டுமல்லாமல் சுயமாக தொழில் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்குவதற்காக இப்படி ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை பிரித்து நிர்வாகக் காரணத்திற்காகவும், பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்ற பாலை குறித்த காலத்தில்  பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதியாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  இப்படிப்பட்ட சங்கங்களுக்கெல்லாம் இன்றைக்கு தமிழ்நாடு கிராம வங்கி உதவி செய்கின்றது.

நம்முடைய பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி.  விவசாயம் செழிக்க வேண்டுமென்றால் நீர் வேண்டும். ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ, அதுபோல விவசாயத்திற்கு நீர் முக்கியம்.  ஆகவே, நீர் மேலாண்மைத் திட்டத்தை கொண்டுவந்து, முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக அம்மாவினுடைய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  குடிமராமத்து திட்டத்தின் மூலமாக ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்படுகின்றன.  பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீர் நிலைகளை உயர்த்தி, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கிறது, குடிப்பதற்கான தேவையான நீரை அரசு பெற்றுத் தருவதற்காக இந்த திட்டத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம். அதன் வழியாக, சேலம் மாவட்டத்தில், பருவகாலங்களில் அதிகமாக மழை பெய்கின்ற பொழுது அந்த மழைநீர் வீணாக கடலிலே கலக்கின்றது. இப்படிப்பட்ட காலங்களில் காவிரி ஆற்றில் உபரியாக செல்கின்ற நீரை பயன்படுத்தி ரூபாய் 565 கோடியில், 100 ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்ற திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். அந்தத் திட்டம் நிறைவேறுகின்றபொழுது, சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 100 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த 100 ஏரிகளில் ரூபாய் 565 கோடி செலவிலே காவிரியில் இருக்கின்ற உபரிநீர் வருகின்ற காலகட்டத்தில் அங்கேயிருந்து சொட்டு நீர் பாசனம் மூலமாக எடுத்துச் சென்று அந்த தண்ணீர் ஏரிகளில் நிரப்பப்படும். இதையெல்லாம் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டத்தை நம்முடைய அரசு இந்த மாவட்ட மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அம்மா முதலமைச்சராக இருக்கும் பொழுது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நான் இருந்த பொழுது வறட்சியாக இருக்கும் ஓமலூர் மற்றும் தாரமங்கலம் வட்டாரத்திற்கு சென்று பார்த்தேன். ஓமலூர் பகுதியில் மலர் அதிகமாக உற்பத்தி செய்கிறோம். அங்குள்ள விவசாயிகள் எல்லாம் எங்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை, பெங்களூருக்கு சென்று தான் இந்த மலர்களை விற்பனை செய்கின்றோம் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டிலேயே மலர்கள் விற்பனை செய்வதற்கு ஒரு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை வைத்தார்கள். சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள விவசாயப் பெருமக்கள் அதிகமாக மலர் சாகுபடி செய்கிறார்கள். ஒட்டுமொத்த 4 மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்கள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அம்மாவினுடைய அரசு ஓசூரில் மிகப்பிரம்மாண்டமான உலகத் தரத்திற்கேற்ற மலர் ஏல மையம் ஒன்றை ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கவுள்ளது. இது சர்வதேச ஏல மையமாக நடத்தப்படுவதால் பல்வேறு நாடுகளிலிருந்து, மாநிலங்களிலிருந்து வரக்கூடிய வியாபாரிகள் மலர்களை வெளிநாட்டிற்கும் அனுப்பலாம்.

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக அதனை முறையாக அரசு வாங்கி பயன்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்பதற்காக அம்மாவினுடைய அரசு 10 மாவட்டங்களின் தலைமையிடத்தில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யக்கூடிய விற்பனை மையத்தை ஏற்படுத்தவிருக்கின்றோம்.  சென்னைக்கு அருகே 300 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 2 ஆயிரம் கோடியில் உணவுப் பூங்கா அமைக்கவிருக்கின்றோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை உணவுப் பூங்காவில் விற்பனை செய்கின்ற பொழுது உரிய விலை கிடைக்கும்.    இதற்கும் மேலாக, 900 ஏக்கரில், ரூபாய் 1,000 கோடியில் சேலம் மாவட்டம், தலைவாசலில் கால்நடைகளை வளர்க்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு அனைத்து அம்சங்களுடன் கூடிய ஆசியாவிலேயே பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா ஒன்றை உருவாக்கவிருக்கின்றோம். பால் உற்பத்திக்கு தேவையான உயர் ஜாதிப் பசுக்கள் மற்றும் ஆடு, கோழி, நாய், பன்றி அனைத்தையும் வளர்க்க அங்கே கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியையும் துவக்கவிருக்கின்றோம். தமிழ்நாட்டில் 76 அரசு கல்லூரிகளுக்கு அம்மா அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதேபோல, பொறியியல், வேளாண்மை, மருத்துவம், ஐடிஐ, கால்நடை மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களினால், தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து