போர் வந்தால் ஒரே வாரத்தில் ஆப்கன் இல்லாமல் போகும்: அதிபர் டிரம்ப் ஆவேசம்

ஆப்கானிஸ்தானுடன் போர் வந்தால் ஒரே வாரத்தில் அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே நீக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான நேற்று முன்தினம் சந்திப்பு நடந்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்து இரண்டு நாட்டு அதிபர்களும் பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்தும் இரண்டு நாட்டு தலைவர்களும் பேசிக் கொண்டனர். ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து பேசிய டிரம்ப், ஆப்கானிஸ்தான் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் எங்களுக்கு உதவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றுதான் எங்களுக்கும் ஆசை. ஆனால் ஆப்கானிஸ்தானில் இன்னும் தலிபன் ஆதிக்கம் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இன்னும் எங்கள் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ளவில்லை. தலிபன்களை பேச்சுவார்த்தை நடத்தாமல் எங்களால் சண்டையிட்டு அழிக்க முடியும். போர் என்று வந்தால் ஒரே வாரத்தில் ஆப்கானிஸ்தான் இல்லாமல் போகும். ஆப்கானிஸ்தான் உடன் போர் வந்தால் ஒரே வாரத்தில் அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே நீக்குவோம். ஆனால் அமெரிக்காவிற்கு அந்த எண்ணம் இல்லை. எங்களுக்கு ஒரு கோடி பேரை கொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை. அதனால்தான் நாங்கள் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறோம். எல்லாம் சரியாக சென்றால் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து முழுதாக விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.