முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளாமல் பொய் வாக்குறுதிகளை கூறி ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் - வாணியம்பாடியில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம்

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வறட்சி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா கிராமத்தினருக்கும் அம்மாவின் அரசு உரிய நிவாரண நிதி வழங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி எல்லா குடும்பத்திற்கும் தலா ரூ. ஆயிரம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு, இந்த தேர்தல் முடிந்ததும் 2 ஆயிரம் ரூபாயை அம்மா அரசு வழங்கும். இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வீடு, வீடாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் 70 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நாங்கள் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்.

தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் தேவையாக இருந்தது. ஆனால் அப்போது எப்போது மின்சாரம் வரும். எப்போது போகும் என்று தெரியாத நிலை இருந்தது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இப்போது கிட்டத்தட்ட 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. மின் உற்பத்தி பெருகினால் தொழில்வளம் பெருகும். தமிழகத்தில் புதிய, புதிய தொழில்கள் வந்த வண்ணமிருக்கிறது. 3 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு 304 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிறந்த ஆட்சியும் சிறந்த நிர்வாகமும் நடப்பதால் தான் தொழில் நிறுவனங்கள் வருகின்றன. கிட்டதட்ட 5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கிறது. 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை தந்த அரசு அம்மாவின் அரசு.

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 256 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவிலேயே நம்முடைய குழந்தைகள் சிறப்பாக வளர வேண்டும் என்பதற்காக ஏழைத் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 18 ஆயிரம் வழங்கினார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. 18 லட்சம் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கும் நல்ல திட்டங்களை தந்தது அம்மாவின் அரசு தான். பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீதம் இந்தியாவில் 33 சதவீதமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு சதவீதம் 22 சதவீதமாக இருந்தது. அதை 16 சதவீதமாக குறைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் உயர்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எதிர்கால தமிழகம் அறிவார்ந்த தமிழகமாக மாற வேண்டும் என்பதற்காக மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதன் மூலம் மாணவர்கள் திறமையானவர்களாக அதிக மதிப்பெண் பெறுபவர்களாக மாற முடியும். இன்னும் பத்தாண்டுகளில் தமிழகம் விஞ்ஞான உலகில் மிகச் சிறந்த மாநிலமாக மாற மடிக்கணினி திட்டம் உதவும். அமெரிக்காவில் கூட இல்லாத இலவச மடிக்கணினி திட்டத்தை அறிமுகம் செய்து வழங்கியவர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சியில் இது போன்ற என்ன திட்டம் கிடைத்தது?

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விஞ்ஞான ரீதியில் பொதுமக்களிடம் பொய் வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி வருகிறார். தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவோம் என்று கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி வாக்குறுதி அளித்தது. அவர்களால் எப்படி தர முடியும். இது போன்ற பொய்யான வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. அம்மா அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அம்மாவின் ஆட்சியில் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மு.க. ஸ்டாலின் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வோம் என்றும், படிப்பிற்காக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும் பச்சைப் பொய் சொன்னார். அதை செய்ய முடிந்ததா? தி.மு.க. கூட்டணியால் மத்திய ஆட்சியிலும் நுழைய முடியவில்லை. மாநில ஆட்சியிலும் நுழைய முடியவில்லை. நாங்கள் எதை செய்வோமோ அதைத்தான் சொல்வோம். இந்த நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும்தான். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொன்னதை செய்தார்கள். அவர்களது வழியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் தருவோம். ஐ.எஸ்.ஐ. முத்திரை போல் தரமுள்ள கட்சி அ.தி.மு.க.தான். தரமில்லாத கட்சி தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது சிறப்பானதொரு ஆட்சியை நடத்தி வருகிறோம்.

தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 48.6 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர்கள் படிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

இரண்டரை ஆண்டில் 6 சட்டக்கல்லூரிகளை கொண்டு வந்தது அம்மாவின் ஆட்சி தான். சட்டம் பயில மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்தது. அந்த தடையை அகற்றி ஏழை மாணவர்களும் சட்டம் படிக்கலாம் என்ற நிலையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இன்னும் 2021-ம் ஆண்டு வரை அம்மாவின் ஆட்சி இருக்கிறது. இன்னும் எண்ணற்ற திட்டங்கள் வரவிருக்கிறது.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். ஒரு மாநிலத்தில் தொழில் வளம் செழிக்க அமைதி நிலவ வேண்டும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிம்மதியை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக 2023-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தர திட்டமிட்டிருக்கிறோம். வாணியம்பாடியில் வீடில்லாத தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.   இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், உள்ளிட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து