முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.கவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது! துரைமுருகன் மகன் கதிர்ஆனந்துக்கு பணியாற்ற உதயநிதி ஆதரவாளர்கள் மறுப்பு: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

சனிக்கிழமை, 27 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.கவில் கடும் உட்கட்சி குழப்பம் நிலவுவதாகவும், துரைமுருகன் மகனுக்கு ஆதரவாக பணியாற்ற உதயநிதி ஆதரவாளர்கள் மறுப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் 36-வது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை மற்றும் பணியாளர் சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி மற்றும் மின்சாரக்கார்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும். மின்சார கார்களுக்கான சார்ஜர் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். இதற்கான ஆணை வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியிடப்படும். பிளஸ்-2 ஆங்கில பாடத்தில் தமிழ் முன்னூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க மொழி என்று கூறப்பட்டிருப்பது தவறானது. இதற்கு யார் காரணமானவர்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். அந்த கருத்து வரவேற்கத்தக்கது.

உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, உலகம் தோன்றியதும் முதல் தோன்றிய மொழி தமிழ், கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. ஒரு சிலர் தமிழை எதிர்ப்பதை யாரும் ஏற்கமுடியாது. யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். பதவிக்காக கட்சியை புகழ்வதும், பதவி கிடைக்காத போது விமர்சனம் செய்வதும் கூடாது. என்னை கூட 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சபாநாயகர் நாற்காலியில் உட்காரவைத்து அழகு பார்த்தார். அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவி பறி போனது. அதற்காக நான் அழவில்லை. மைத்ரேயன் எனக்கும் கூட நண்பர்தான். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், அதற்காக பதவி இல்லையென்றால் விமர்சனம் செய்ய கூடாது. அரசியலில் எமோஷனலுக்கு இடமில்லை. இறைவன் என்ன நினைக்கிறானோ அது தான் நடக்கும். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதற்கிடையில் வாணியம்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார்.,

பாராளுமன்றத்தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற முடியாது. 5 சவரன் நகையை அடகு வைத்த மக்களுக்கு அதை மீட்க தி.மு.க கொடுத்த வாக்குறுதி என்னவானது? தேர்தல் காலத்தில் மாதம் 6,000 ரூபாய் கொடுப்பதாக சொன்னீர்களே அது என்னவானது? கல்விக்கடன் விவசாயக்கடன் போன்றவற்றை ரத்து செய்வதாக சொன்னீர்களே தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவானது என்று வேலூர் மக்கள் கேட்பார்கள். வேலூர் தொகுதியில் தி.மு.கவிலேயே உள்கட்சி பிரச்னை, துரைமுருகன் மகனுக்கு, ஸ்டாலின் மகன் உதயநிதி ஆதரவாளர்கள் பணியாற்றவில்லை. சினிமாவில் கிளிசரின் போட்டு விட்டு நடிகர்கள் அழுவார்கள். கிளிசரின் இல்லாமல் அழக்கூடிய ஒரே நடிகர் துரைமுருகன் தான் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து