முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற தமிழக காவல்துறை அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து

திங்கட்கிழமை, 29 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை பெற்ற தமிழக காவல் துறை அதிகாரிகள் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற 62-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணியைச் சேர்ந்த 13 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி. அனுராதா ஆகியோர் தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அகில இந்திய அளவில் காவல் ஆளிநர்கள், அதிகாரிகள், மோப்ப நாய் படையினர் மற்றும் காவல்துறை புகைப்பட நிபுணர்களுக்கான 62-வது  அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி-2018, உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த 16.7.2019 முதல் 20.7.2019 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 21 மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும் மற்றும் 6 துணை ராணுவப் படைகளும் பங்கேற்றன.  இந்தப் பணித்திறன் போட்டியில், தங்கப் பதக்கங்களை வென்ற காவல் ஆய்வாளர் ஜான்விக்டர், காவலர் மார்ட்டின் (மோப்ப நாய் பயிற்சியாளர்) மற்றும் முதுநிலை காவலர் முருகானந்தம், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற உதவி ஆய்வாளர் விஜய், வெள்ளிப் பதக்கங்களை வென்ற உதவி ஆய்வாளர் வீராசாமி, காவலர் லோகநாதன் (மோப்ப நாய் பயிற்சியாளர்) மற்றும் தலைமை காவலர் முரளிதரன், வெண்கலப் பதக்கங்களை வென்ற உதவி ஆய்வாளர் விக்னேஷ் பிரபு, காவலர் ஜெயராஜ், காவல் ஆய்வாளர் அருணா ஸ்ரீ மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி இந்துமதி, அறிவியல் சார்ந்த புலனாய்வு திறன் போட்டியில் முதலிடத்திற்கான  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை வென்ற அணித் தலைவர் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகசாமி, அறிவியல் சார்ந்த புலனாய்வு திறன் போட்டியில் இரண்டாம் இடத்திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை வென்ற குழுவினர் – காவல் ஆய்வாளர் ஜெயசுதா மற்றும் உதவி ஆய்வாளர்  பாரதி, மோப்ப நாய் பிரிவு போட்டியில் முதலிடத்திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை வென்ற குழு தலைவர் - காவல் ஆய்வாளர்  கமலகண்ணன் ஆகிய 13 காவல்துறை வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். மேலும், ஆஸ்திரேலியா நாட்டின் சமோஆ தீவில் உள்ள அபியா நகரில் 9.7.2019 முதல் 14.7.2019 வரை நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய நாட்டின் சார்பில் கலந்து கொண்டு பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 87 கிலோ உடல் எடைப்பிரிவில்  தங்கப் பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுராதா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக கூடுதல் காவல்துறை இயக்குநர் அம்ரேஷ் பூஜாரி  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து