முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் இன்று மருத்துவமனை தின கொண்டாட்டம் - அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

திங்கட்கிழமை, 29 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்ததினமான ஜுலை 30-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்  மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 16.07.2019 அன்று கீழ்காணும் அறிவிப்பினை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அம்மாவின்அரசு முதல்வரின் ஆணையின்படி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனையின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாள் மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907-ம் ஆண்டு மருத்துவம் பயின்ற  இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தவரும் பல்வேறு சமுகப் பணிகளை செய்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜுலை 30-ம் நாள் மருத்துவமனை தினமாக இவ்வாண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

மருத்துவமனை தினம் கொண்டாடப்படுவதற்காக ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தினம் மருத்துவமனை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் மருத்துவமனையின் ஆண்டு விழாவாகவும் கொண்டாட மருத்துவமனை தினக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மருத்துவமனையின் வளச்சியில் பங்குபெறச் செய்தல், மருத்துவமனையின் அன்றாட பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் பங்களிப்பினை வழங்கிட ஊக்குவித்தல், மருத்துவமனையின் பல்வேறு சேவைகளை காட்சிப் படுத்துதல், மருத்துவமனையின் வசதிகள், சாதனைகள், புதிய முயற்சிகள், உயிர்காக்கும் சிகிச்சை முறைகள், நலவாழ்வு விழிப்புணர்வு கண்காட்சி ஆகியவற்றை காட்சிப்படுத்துதல், மருத்துவமனை சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் மற்றும் மருத்துவமனை அருகிலுள்ள ஏனைய மக்களுக்கு இடையே பிணைப்பினை வளர்ப்பது, மருத்துவமனையின் வளச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் தொண்டு நிறுவனங்கள், கொடையாளர்கள், சமூக அமைப்புகள், சமூக பொறுப்பு நன்கொடை அளிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆகியோரை அங்கீகரித்து பாராட்டுதல் மற்றும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வரும் பணியாளர்களை பாராட்டுதல். மருத்துவமனை அலுவலர்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள ஊக்குவிப்பதோடு மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் அறிய செய்து மருத்துவமனையின் சேவைகளை அனைவரும் பயன்படுத்த ஏதுவாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட  ஊக்குவித்தல், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் தங்கள் பணி மற்றும் சிகிச்சைகள் குறித்து பகிர்ந்து கொள்ளுதல், விளையாட்டு மற்றும் பல்சுவை போட்டிகளில் பணியாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுதல், மரம் நடுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துதல் போன்றவை இந்த மருத்துவமனை தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும். இதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்து மருத்துவமனை மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒரு பாலமாக அமைய இம்மருத்துவமனை தினம் கொண்டாடப்படுகிறது.  இவ்வாறு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து