முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது முறையாக சந்திரயான் - 2 விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சந்திரயான் - 2 விண்கலத்தின் சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. மார்க்-3 ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிற்பகல் 2.52 மணிக்கு முதல் முறையாக சந்திரயான்–2 விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 230 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,163 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.பின்னர் 2வது முறையாக கடந்த 26-ம் தேதி அதிகாலை 1.08 மணிக்கு சந்திரயான்–2 விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்சம் 251 கி.மீ.யிலும், அதிபட்சமாக 54,829 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றிவரும் வகையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 3-வது முறையாக நேற்று முன்தினம் பிற்பகல் 3.12 மணிக்கு விண்கலத்தில் உள்ள என்ஜினை 989 வினாடிகள் இயக்கி அதன் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இதில் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 276 கி.மீ., அதிகபட்சமாக 71,792 கி.மீ. தொலைவிலும் சுற்றிவரும் வகையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.இந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து