முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சரவை 8-ம் தேதி விரிவாக்கம்? முதல்வர் எடியூரப்பா திட்டம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

கர்நாடக அமைச்சரவை வரும் 8-ம் தேதி விரிவாக்கம் செய்ய எடியூரப்பா திட்டமிட்டு உள்ளதாகவும், முதல் கட்டமாக 13 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்து விட்டது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. அரசு கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி பதவி ஏற்றது. எடியூரப்பா மட்டும் முதல்வராக பதவி ஏற்றார். அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை.

எடியூரப்பா அரசு அமைந்து ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து, தங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர். அந்த மனுக்கள் மீது விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் சார்பில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வர சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை சபாநாயகரின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைச்சராவதில் எந்த சிக்கலும் இருக்காது. அந்த இடைக்கால தடையை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கிறார்கள். இதற்காக தான் அமைச்சர்களை நியமனம் செய்வதில் பா.ஜ.க.வும் நிதானமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே கர்நாடக அமைச்சரவையை வருகிற 8 அல்லது 10-ம் தேதி விரிவாக்கம் செய்ய முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாதுசாமி, உமேஷ்கட்டி, ஈசுவரப்பா, கோவிந்த கார்ஜோள், ஆர்.அசோக், டாக்டர் அஸ்வத் நாராயணா, பசவராஜ் பொம்மை, பசனகவுடா பட்டீல் யத்னாள், நாகேஷ் (சுயேச்சை எம்.எல்.ஏ.), சி.டி.ரவி, ரேணுகாச்சார்யா, ஸ்ரீராமுலு ஆகிய 12 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது மட்டுமின்றி ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்ததில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் சி.பி.யோகேஷ்வருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சி.பி. யோகேஷ்வர், எம்.எல்.ஏ.வாக இல்லை. அதனால் அவரை அமைச்சராக்கி, மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. ஆக மொத்தம் 13 பேருக்கு முதல்கட்டமாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே முதல்வர் எடியூரப்பாவை பெங்களூரு விதான சவுதாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசினார். அவர் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி பிறப்பித்த உத்தரவை மீறி, என்.மகேஷ் எம்.எல்.ஏ. சபையை புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து